EPS vs SPV இரண்டாக உடைந்த அதிமுக : தகுதி நீக்கம் சபாநாயகர் கையில் முடிவு! : அதிருப்தியாளர்களை நீக்கி எடப்பாடி அதிரடி...

அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், அதிருப்தியாளர்கள் சஸ்பெண்ட், கட்சி தாவல் தடைச் சட்டம் என, தமிழக அரசியல் களம் பரபரப்பில் ஆழ்ந்து இருக்கிறது
AIADMK split into two, dissidents suspended by EPS
AIADMK split into two, dissidents suspended by EPSgoogle
2 min read

ஆட்சி அமைத்த தவெக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போராடியது.

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க ஒரு வழியாக 120 பேரின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது. ஆட்சி அமைத்தார் விஜய்.

தமிழக அரசியல் களம்

இதனிடையே திமுக - அதிமுக கூட்டணி அமைத்து எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஒருவழியாக அனைத்து கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய், எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. இது விமர்சனமாகவும் பேசப்பட்டது.

அதிமுகவில் பிளவு

சட்டமன்ற கூட்டத்திற்கு எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்களும், எஸ்பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களும் தனித்தனியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பேசப்பட்ட நிலையில், கட்சி ஒற்றுமையுடன் இருப்பதாக, எடப்பாடியும், வேலுமணியும் கூறினர்.

இரண்டாக உடைந்த அதிமுக

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக இரண்டாக உடைந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

அரசுக்கு ஆதரவாக வேலுமணி தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களிக்க, எதிராக எடப்பாடி தரப்பை சேர்ந்த 22 பேர் வாக்களித்தனர்.

பரஸ்பரம் குற்றச்சாட்டு

அதன்பிறகு, இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இப்போது உண்மையான அதிமுக என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

கட்சித் தாவல் தடைச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், அக்கட்சியின் மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.

தகுதி நீக்க விவகாரம்

எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 உறுப்பினர்களையும் எஸ்.பி. வேலுமணி தரப்பு 25 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

அதன்படி பார்த்தால் வேலுமணி தரப்பிற்கு 31 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் தான் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

சபாநாயகர் கையில் முடிவு

கொறடா உத்தரவை மீறி விட்டதாக வேலுமணி தரப்பை தகுதி நீக்கம் செய்யுமாறு எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் புகார் அளிக்கலாம். அப்படி அளித்தால் முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகர் கையில் தான் இருக்கிறது.

பொதுவாக, இத்தகைய சூழல்களில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது, இருந்தாலும் நீதிமன்றங்கள் இதில் தலையிட வாய்ப்புள்ளது.

நீதிமன்றம் சென்றால் சிக்கல்

வேலுமணி தரப்பு தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினால் அல்லது மற்றொரு கட்சியுடன் இணைவதாக அறிவித்தால், தேர்தல் ஆணையத்தின் பக்கம் பிரச்னை போகும். அப்போது, இரட்டை இலை முடக்கி வைக்க கூட வாய்ப்பு இருக்கிறது.

பதவிப் பறிப்பு - எடப்பாடி அதிரடி

இதற்கு இடையே, அதிருப்தியாளர்கள் மீது அதிரடி காட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் கட்சி பதவிகளை பறித்த அவர், , 17 மாவட்டச் செயலர்களை புதிதாக நியமித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் நீக்கம்

அதிமுக துணைப் பொதுச்செயலர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பதவிகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தலைமை நிலைய செயலர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளிலிருந்து வேலுமணி நீக்கப்பட்டுள்ளர்.

சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், தங்கமணி, விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா ஆகியோரது அமைப்புச் செயலர் பதவிகளும், மாவட்டச் செயலர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.

கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருண்மொழி தேவன் உள்ளிட்டோரின் பதவிகளையும், எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.

அதிருப்தியாளர்கள் போர்க்கொடி

பதவியை இழந்தவர்கள், தங்களை வெளியேற்ற எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். இதனால், இதுதரப்பினரும் மோதலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in