

எடப்பாடிக்கு எதிராக கலகம்
ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம் என ஒரு பிரிவினர் விமர்சித்தனர்.
தவெகவிற்கு 25 பேர் ஆதரவு
தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிற விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது, தவெக அரசை ஆதரித்தனர். ஆனால், எடப்பாடி பக்கம் நின்ற 22 பேர் மட்டும் எதிராக வாக்களித்தனர்.
அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா
இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தார். இதனால் 6 தொகுதிகள் காலியாக, 2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா எம்எல்ஏக்களாக பதவியேற்க, சட்டசபையில் தவெக பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.
எடப்பாடிக்கு பெரும் பின்னடைவு
பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அதிமுக இடைத்தேர்தலில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் தோல்விகள் எடப்பாடி பொதுச் செயலாளராக நீடிப்பதில் சிக்கலை உருவாக்கும், அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும், இதேநிலை நீடித்தால், தோல்விகள் மட்டுமே மிஞ்சும் என்ற குரல்கள் வேகமாக ஒலிக்க தொடங்கி விட்டன.
அதிருப்தியாளர்கள் அவசர ஆலோசனை
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிருப்தியாளர்கள், தங்கள் செயல்பாட்டை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து இவர்கள் ஆலோசித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தவெக அரசை ஆதரித்த 19 எம்எல்ஏக்கள் உள்பட 28 பேர் தனி அணியாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. அப்படி நடந்தால், அதிமுக உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
மூன்றில் இரண்டு பங்கு பலம் இருப்பதால், 28 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டமும் பாயாது. அப்போது எடப்பாடி பழனிசாமி தனியாக விடப்படுவார், அல்லது, பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவார்.
அதிருப்தியாளர்கள் அதிமுக பொதுக்குழுவை கூட்டும் படி நெருக்கடி கொடுத்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் தான்.
ஒருவேளை அதிமுக எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு, தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தால், 5 ஆண்டுகளுக்கு விஜய் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் வராது.
எனவே, அதிமுகவில் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
===============