

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்
AITUC, CITU on Transport Corporation Employees Pension Scheme : அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது எப்போது முதல் செயல்படுத்தப்படும், அரசாணை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.
அதிமுக ஆட்சியில்...
இந்தநிலையில், ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் 2003 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் பொருந்தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்குப் பொருந்தாத ஒரு திட்டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் வஞ்சிப்பு
ஊதிய ஒப்பந்தங்களின்படி உருவான ஓய்வூதியத் திட்டத்தை அரசாணை மூலம் தடுக்க முடியாது என தொடர்ந்து ஏஐடியுசி உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து போராடி வந்தன. அதைத்தொடர்ந்து, 2008ல் சீரமைப்பு குழு திமுக அரசின்போது போடப்பட்டது. அதில் ஏஐடியுசி வலுவான வாதங்களை முன்வைத்தது.
தமிழக அரசு உறுதியளித்தது
சீரமைப்பு குழுவினுடைய பரிந்துரையில் மக்கள் நல சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசே பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசின் பரிசீலனைக்கு பின்பு பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றப்படும் என ஊதிய ஒப்பந்த சரத்துகளில் உறுதி அளிக்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டம்
இந்நிலையில் அரசுப் பணியாளர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏஐடியுசி வரவேற்கிறது. அதேபோல், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அதிமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் செயல்படுத்த வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாக பங்களிப்புத் தொகை 12 சதவீதத்தை எடுத்துக்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஆறுமகம் வலியுறுத்தி உள்ளார்.
ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்க
சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் வெளியிட்ட அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், 202-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசு வெளியிட்ட அரசாணையை வாபஸ் பெற்று, 2023 ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்துக
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டது. எனவே, தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்தி போக்குவரத்து ஊழியர்களுக்கும் அமலாக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
=================