

Breakfast Quality Inspection by Teachers: School Education Department Issues Strict Order
காலை உணவில் பல்லி விழுந்த சம்பவம்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள கொட்டையூர் நடுநிலைப் பள்ளியில், நேற்று வழங்கப்பட்ட காலை உணவான ரவா கிச்சடியில் பல்லி இறந்து கிடந்தது.
இந்த உணவைச் சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடரும் உணவுப் பாதுகாப்புப் பிரச்சனைகள்
ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் இதேபோல பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 11 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் சென்று கள ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து சமையல் பணியாளர்கள் இருவரைப் பணியில் இருந்து விடுவித்ததுடன், பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் முதலில் தரம் பார்க்க உத்தரவு
இந்தத் தொடர் சம்பவங்களின் எதிரொலியாக, இனி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவை ஆசிரியர்களே முதலில் ருசித்துத் தரம் பார்த்த பிறகே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மாணவர் பாதுகாப்பில் சமரசம் இல்லை
காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என்றும், உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு!
=====