

திருச்செந்தூர் கோவில்
Thiruchendur Temple Bait Barrage Issue : உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவில் அருகே உள்ள கடலில் நீராடி, முருகப் பெருமானை வழிபடுவது பக்தர்கள் வாடிக்கை. அண்மைக் காலமாக அடிக்கடி திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி வருகிறது.
புதிதாக தூண்டில் வளைவு
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன், “ சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் இருந்து சில கி மீ துாரத்தில் கடலுக்குள் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவு காரணமாக கடல் நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டு கோவில் அருகே கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
கோவில் அருகே கடல் அரிப்பு
திருச்செந்தூர் கடலில் கட்டப்பட்டிருக்கும் தூண்டில் வளைவுப் பாலம் அண்மை காலங்களில் மிக முக்கியமான மற்றும் பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது. அதன் பயன்பாடு, சுற்றுச்சூழல் தாக்கம், மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகிய மூன்று காரணங்கள்தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.
கடல் நீரோட்டம் தடுப்பு
சுற்றுச்சூழலியல் மற்றும் புவியியல் தாக்கம் திருச்செந்தூர் கடலில் உள்ள தூண்டில் வளைவு கடலில் நீரோட்டத்தைத் தடுக்கிறது என்றும் அதன் திசையை மாற்றுகிறது என்றும் இதனால், தூண்டில் வளைவின் ஒரு பகுதியில் மண் குவிந்து (Accretion) கடற்கரை விரிவடைகிறது என்றும் கூறப்படுகிறது.
மீன்பிடி தொழில் பாதிப்பு
ஆனால் மறுபகுதியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்படுகிறது என்றும் இது கடலோர நிலப்பரப்பை நிரந்தரமாக மாற்றுகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இந்ததூண்டில் வளைவு அமைப்பு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலை நேரடியாகப் பாதிக்கிறது என்று மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நாழிக்கிணறு - நீரின் தன்மையில் மாற்றம்
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள நாழிக் கிணறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது கடல் நடுவில் உள்ளபோதும், அதன் நீர் உப்பாக இல்லாமல், நன்னீராக இருப்பது ஒரு அதிசயம் ஆகும். ஆனால் தூண்டில் வளைவு கட்டப்பட்ட பிறகு, நாழிக் கிணற்றின் நீரின் தன்மை மாறிவிட்டதாகவும், கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டதாகவும் பக்தர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
ஆன்மிக கட்டமைப்பு பாதிப்பு
இந்தத் தூண்டில் வளைவு அந்தப் புனிதமான கட்டமைப்பைச் சீர்குலைப்பதாக பக்தர்கள் பார்க்கிறார்கள். கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தவும், துறைமுகம் அல்லது படகுகளை நிறுத்துவதற்கான வசதியை மேம்படுத்தவும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலம் - எழும் கேள்விகள்
ஆனால், இந்தப் பாலம் மிக நீண்டதாகவும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதில் தெளிவு இல்லை என்றும், இது யாருடைய தனிப்பட்ட தேவைக்காக அல்லது வர்த்தக நோக்கம் கொண்டதா என்றும் கேள்விகள் பலர் எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்கு முன்பு, போதிய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை மீனவர்கள் முன் வைக்கிறார்கள்.
கோவிலுக்கு பாதுகாப்பில்லை
வளைவை மாற்றி அமைக்க வேண்டும் இந்நிலை நீடித்தால் கோவிலுக்கு பாதுகாப்பில்லை. பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராட முடியாத நிலை ஏற்படும் . எனவே தமிழக அரசு உடனடியாக கடலுக்குள் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவை மாற்றி அமைக்க வேண்டும்.
கோவிலை காப்பாற்றிடவும், பாதுகாக்கவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். துாண்டில் வளைவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
======