Anbumani demanded thatgovernment calculate the damaged crops in Cauvery irrigation districts, provide compensation
Anbumani demanded thatgovernment calculate the damaged crops in Cauvery irrigation districts, provide compensation

’மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு’ : அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on

நீரில் மூழ்கிய 2 லட்சம் ஏக்கர் பயிர்கள்

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

உழவர்களுக்கு இரட்டை பேரிடி

ஏற்கனவே, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நிலையில், இப்போது அறுவடைக்கு தயாராக உள்ள குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களும் தொடர் மழையில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இது உழவர்களுக்கு இரட்டைப் பேரிடியாக அமைந்திருக்கிறது.

ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்

காவிரி பாசன மாவட்டங்களில் மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கி விடும். சம்பா மற்றும் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கி விடும். இதனால் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். நடப்பாண்டில் குறித்த காலத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உழவர்கள் இருந்தனர்.

இழப்பீடு மூலமே துயரம் களையும்

அறுவடைக்கு முன்பாக மழையால் பயிர்கள் சேதமடைந்தால் அவர்கள் செய்த முதலீடு அனைத்தும் வீணாகி பெரும் கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே உழவர்களைக் காப்பாற்ற முடியும்.

விவசாயிகள் கடனாளி ஆகக் கூடாது

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in