
Anbumani Ramadoss on Ajith Kumar Death: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது, நாள்தோறும் புதிய சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. சிபிசிஐடி விசாரணை, சிபிஐ விசாரணை, டிஎஸ்பி சஸ்பெண்ட், எஸ்பிக்கு காத்திருப்போர் பட்டியல், அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் என பட்டியல் நீண்டாலும், பின்னணியில் இருந்த நபர் குறித்த மர்மம் இன்னும் விலகாமல்தான் உள்ளது.
இந்தநிலையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அஜித்குமாரை நன்கு அடித்து விசாரிக்கும்படி ஆணையிட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்?.
தப்பிக்க நினைக்கும் தமிழக அரசு :
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையை, அதிகாரம் படைத்த சிலருக்கான அடியாள் படையாக செயல்பட வைத்து, அப்பாவி இளைஞர் ஒருவரின் கொலைக்கு காரணமாக இருந்த திமுக அரசு, அந்தப் பழியிலிருந்து தப்புவதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறது.
சொந்த மக்களையே படுகொலை செய்யும் திமுக அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன்மீது படிந்திருக்கும் இரத்தக் கறையை போக்க முடியாது.
கட்டளையிட்டால் அராஜகம் :
அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டளையிட்டால் அப்பாவி மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து கொலை செய்யும் படையாகவே தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. இது நியாயமா?
அஜீத்குமாரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய காவலர்கள், மனித மிருகங்களாகவே மாறியிருக்கின்றனர். அஜித்குமாரின்(Ajith Kumar Death) உடலில் 44 காயங்கள் இருந்ததாக இடைக்கால உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அந்த அதிகாரி யார்? :
இந்த அளவுக்கு கொடூரங்களை நிகழ்த்த வேண்டும் என்றால், அதற்கான ஆணை காவல்துறையில் உயர் நிலையிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். அப்படியானால், அந்த ஆணையை வழங்கிய அதிகாரி யார்? கொலை செய்வதை விட அதை மூடி மறைக்க முயல்வது பெருங்குற்றம்.
அப்பாவி இளைஞரை அடித்து விசாரணை நடத்தத் தூண்டிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரி யார்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்; இதில் தொடர்புடைய காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், கைதும் செய்யப்பட வேண்டும்;
காவல்துறைக்கு பயிற்சி :
கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்பட்ட உதவிகள் தவிர ரூ,.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக மக்களுடன் மனிதநேயத்துடன் பழகுவது எப்படி என்பது குறித்து காவல்துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் “ என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.