
தூய்மை பணியாளர்களின் போராட்டம் :
Anbumani Ramadoss on DMK Government : சென்னை ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகள் அனைத்தும் தனியாருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதைக் கண்டித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7வது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால் சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் :
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் பாமக செயல் தலைவர் அன்புமணி, “தூய்மை பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தனியார் வசமான தூய்மை பணி :
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய 2 மண்டலங்களில் குப்பைகள் அகற்றும் பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டெல்லி எம்.எஸ் டபிள்யூ (Delhi MSW solutions ltd) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிரந்தர பணியாளர்கள் அனைவரும் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 7 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால், துர்நாற்றம் வீசும் அவல நிலை நீடிக்கிறது.
முதல்வரின் தொகுதியில் பாதிப்பு :
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் பல பகுதிகளும் இந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தெருவெங்கும் குப்பைகள் கிடப்பதால் நோய்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்கலின் தீவிரத்தை சென்னை மாநகராட்சி சற்றும் உணரவில்லை எனவும், சென்னை மாநகராட்சியின் இத்தகைய ரூ.2,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தால் தாங்கள் எந்த வகையில் பயனடையலாம் என கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறது என அன்புமணி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தூய்மை பணியாளரின் நியாயமான கோரிக்கை:
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வராத நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் பணியாளர்கள் ரூ.21,000 வரை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் பணியாளர்கள் பணிக்கு சேர்ந்தால் ரூ.15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 15 அண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு இது போதுமான ஊதியம் அல்ல. முந்தைய அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால், இப்போது மீதமுள்ள மண்டலங்களை நாங்கள் தனியாரிடம் ஒப்படைக்கிறோம் என்பது அபத்தமானது.
கொரானா காலத்தில் உழைப்பு, தியாகம்:
கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்கள் 13 பேர் பணியில் இருக்கும் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் கூட மதிக்காமல் பணி நீக்குவது மனிதநேயமற்ற செயலாகும். 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சென்னையில் பல மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பணி நீக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவா? :
இன்று அவரே முதலமைச்சராகியுள்ள நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நீக்கப்படுகின்றனர். அதிகாரம் என்ற போதை கண்ணை மறைப்பதால், பணி நீக்கப்படுபவர்கள் பட்டியலினத்தவர்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது.
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் :
முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையாகவே பட்டியலினத்தவர் மீதும், தூய்மைப் பணியாளர் மீதும் அக்கறை இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மாறாக தற்காலிக தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.
====