

Anbumani Accused DMK on Tailapuram : சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒன்றியம், நகரம், பேரூர், மாநகராட்சி பகுதி, செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாமகவினருக்கு அறிவுரை
கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி, “ஒவ்வொரு ஒன்றியச் செயலாளரும் தங்கள் பொறுப்பில் உள்ள 25 கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அது நம்ம கிராமம், நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற மெத்தனத்தில் இருக்க வேண்டாம். ஒன்றியச் செயலாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு கிராமம் சென்றால்கூட, ஒரு மாதத்தில் 25 கிராமங்களை எளிதாகப் பார்வையிட முடியும்.
தமிழகத்தில் மெகா கூட்டணி
விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு மெகா கூட்டணி அமையும், அந்த கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெரும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையப் போவது உறுதி.
பாமக குழப்பத்திற்கு திமுகவே காரணம்
இன்று நம் கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. அதற்கு காரணமும் திமுக தான். தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது. அதுதான் உண்மை. ஐயாவிடம் தினமும் பொய்யை சொல்லி சொல்லி மாற்றியிருக்கிறார்கள்.
திமுகவின் சூழ்ச்சி
கடந்த 50 முதல் 60 ஆண்டுகளாக திமுகவின் சூழ்ச்சியே, வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் சேர விடாமல் பார்த்துக் கொள்வதுதான். இரண்டு சமுதாயமும் சேராமல் இருந்தால், அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள்.
நடப்பதை அறியாதவர் ராமதாஸ்
ஐயா குழந்தை மாதிரி ஆகிவிட்டார். சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. டெல்லியில் போய் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதில் வெறும் 30 பேர் தான் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் 3000 பேர் போராடியதாக ஐயாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.
ஐயாவை ஏமாற்றி வருகிறார்கள்
என்னை தலைவராக அறிவித்த அடுத்த நாளில் இருந்தே ஐயாவிடன் குற்றம்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஐயா, உங்கள் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டுவிட்டு, அவருடைய படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்றார்கள். உடனே ஐயா, ஜி.கே.மணி படம் தமிழ்நாடு முழுவதும் வர வேண்டும் என்றார்.
தந்தை - மகனை பிரித்து விட்டார்கள்
இப்படியொரு சூழ்ச்சி செய்து அப்பா, பிள்ளை இடையே பிளவை பெரிதாக்கி பெரிதாக்கி என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்றவர்கள் சாதாரண ஆட்களே கிடையாது. சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். மனிதர்களாக இருக்கவே தகுதியில்லாதவர்கள்.
அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பாமகவினர் நம்ப வேண்டாம். துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என்று அன்புமணி பேசினார்.
================