’அதிகாரம் கையில் இருக்கும் போது ஏன் கெஞ்சறீங்க’: அன்புமணி விளாசல்

Anbumani Ramadoss on Diwali Omni Bus Price : அதிகாரம் திமுக அரசின் கையில் இருக்கும் போது, ஆம்னி பேருந்து கட்டண உயர்வை கட்டுப்படுத்த தயக்கம் காட்டுவது எதற்காக என்று, அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
Anbumani Ramadoss on Diwali Omni Bus Price Hike in Chennai
Anbumani Ramadoss on Diwali Omni Bus Price Hike in Chennai
2 min read

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

Anbumani Ramadoss on Diwali Omni Bus Price Hike : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதேசமயம், ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆம்னி கட்டணம், பலமடங்கு உயர்வு

இதுபற்றி, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீப ஒளித் திருநாளையொட்டி வரும் சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில், அதற்காக ஊருக்கு செல்ல முடியாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டணத்தைக் குறைக்க வேண்டிய அரசு, அதை செய்யாமல் ஆம்னி பேருந்து நிர்வாகங்களிடம் கெஞ்சுவது கண்டிக்கத்தக்கது.

10 மடங்கு கட்டணம் உயர்வு

தீபஒளி திருநாளுக்காக சென்னையிலிருந்து வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே நாள்களில் சென்னையிலிருந்து கோவை செல்ல ரூ.5000&மும், சேலத்திற்கு ரூ.4110&ம் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. அதேபோல், தீப ஒளி திருநாள் முடிவடைந்து வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை திரும்புவதற்கும் கிட்டத்தட்ட்ட இதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ஆறு முதல் 10 மடங்கு வரை அதிகம் ஆகும். கடந்த ஆண்டு தீப ஒளிக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் ரூ.1000 & ரூ.1800 வரை அதிகம்.

தமிழக அரசுக்கு ஏன் தயக்கம்

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், அந்தக் கடமையையும், அதிகாரத்தையும் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் திமுக அரசு பயன்படுத்தி வருகிறதே தவிர, ஒருமுறை கூட முழுமையாக, கட்டணக் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் பயன்படுத்தியதில்லை. ஆண்டுக்கு குறைந்தது 6 முதல் 10 வரை நீண்ட விடுமுறைகள் வரும் போதெல்லாம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுகின்றன.

கட்டண கொள்ளை தடுக்கப்படவில்லை

ஒவ்வொரு முறையும் கட்டணக் கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. உண்மையாகவே அவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், பேருந்துக் கட்டணக் கொள்ளை இப்போது வரை நீடிக்க வாய்ப்பே இல்லை.

இப்போதும் கூட ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, ஆம்னி பேருந்து நிர்வாகங்களுக்கு ஆதரவாகத் தான் பேசுகிறாரே தவிர, கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

கட்டண கொள்ளைக்கு திமுக ஆதரவு

ஆம்னி பேருந்துகள் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது குற்றம். அந்தக் குற்றத்தை அவர்கள் மறைமுகமாகக் கூட செய்வதில்லை. பேருந்து பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான இணையதளங்களில் கட்டண விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட போக்குவரத்துத் துறை, இந்த இணையதளங்களை கண்காணித்தாலே கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்கள் நாளைக்குள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்; கட்டணக் குறைப்பு குறித்து ஆம்னி பேருந்து நிர்வாகங்களுடன் பேச்சு நடத்துவது போன்ற செயல்களில் தான் அரசு ஈடுபடுகிறது. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல் அரசு கெஞ்சுவது ஏன்?

வெறும் ரூ.2,000 தான் அபராதம்

அதிகக் கட்டணம் வசூலித்தத ஆம்னி பேருந்துகள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்தால் சிரிப்பு தான் வரும். ஆம்னி பேருந்துகள் மீது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது ரூ.2000 அபராதம் விதிப்பது மட்டும் தான். ஒரு பயணச் சீட்டுக்கு ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது தான் நடவடிக்கையா? கடந்த ஆண்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதற்காக 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், அவை அனைத்தையும் அரசு உடனடியாக விடுவித்து விட்டது.

அரசுக்கு எதற்காக தயக்கம்?

சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? இவற்றைப் பார்க்கும் போது ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது அப்பட்டமாகத் தெரியும். எனவே, ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த உடனடி நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

=========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in