

மைனஸில் வேளாண்துறை வளர்ச்சி
Anbumani Ramadoss Criticized DMK : இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் வேளாண்துறையின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக எதிர்மறையாக (மைனஸ்) சென்று கொண்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உழவர்கள் வருமானம் குறைந்து விட்டது
தமிழ்நாட்டில் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வாழும் உழவர்களின் வருமானம் குறைந்து விட்டதை அம்பலப் படுத்தும் இந்த புள்ளி விவரத்தை மறைத்து தமிழகம் செழித்து விட்டதாக மோசடி நாடகத்தையும், வீணான கொண்டாட்டங்களையும் நடத்தி, தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.
வேளாண் உற்பத்தி மதிப்பு குறைந்து விட்டது
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரங்கள் அடங்கிய கையேட்டில் ( Handbook of Statistics on Indian States) இடம்பெற்றுள்ள தரவுகளின்படி,தமிழ்நாட்டின் வேளாண் துறையின் உற்பத்தி மதிப்பு ரூ.51,862.76 கோடியாக குறைந்து விட்டது. இது அதற்கு முந்தைய 2023- 24ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பான ரூ.52,831.20 கோடியுடன் ஒப்பிடும் போது 1.83% குறைவு ஆகும். அதாவது வேளாண்துறை வளர்ச்சி அடைவதற்கு பதிலாக 1.83% வீழ்ச்சி அடைந்துள்ளது.
திமுக ஆட்சியில் தான் வீழ்ச்சி
கடந்த பத்தாண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரு ஆண்டுகளிலும் சேர்த்து தமிழக வேளாண்துறை 5.02% வீழ்ச்சியடைந்திருக்கிறது.வேளாண்துறை சவலைப் பிள்ளையாக மாறி வருவதையே இது காட்டுகிறது.
13 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும்
இதைவிட கவலையளிக்கும் தரவு என்னவென்றால், அடுத்தடுத்து இரு ஆண்டுகளாக வேளாண்துறை வீழ்ச்சி அடைந்து வருவதால், 2024- 25ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 13 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று 2011- 12ம் ஆண்டின் அளவான ரூ.50,310 கோடிக்கு சென்று விட்டது. வேளாண்துறையை 13 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்றது தான் திமுக அரசின் அவலமான சாதனை ஆகும்.
முடி மறைக்கும் திமுக அரசு
வேளாண்துறையை 13 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டது என்று கூறுவது கூட ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அலங்கோலங்களை குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும்.
தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு துறையின் வளர்ச்சி இந்த அளவுக்கு மோசமாக பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், அதை அப்படியே மூடி மறைத்து விட்டு, தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயல்கிறது.
சாதகமான விவரங்கள் மூலம் ஏமாற்ற முயற்சி
உண்மையில் தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு பண வீக்கத்தை கருத்தில் கொள்ளாத நிலையான விலைகளின் அடிப்படையில் 11.19% மட்டும் தான். இதைத் தான் திமுக அரசின் சாதனை என்று கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார். தங்களுக்கு சாதகமான புள்ளி விவரங்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றுவது திமுகவின் வழக்கம் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
வேளாண்துறை வீழ்ச்சி - வளர்ச்சியை பாதிக்கும்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தான் 16% அதிகரித்து விட்டதே, அவ்வாறு இருக்கும் போது நாம் ஏன் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 1.83% குறைந்திருப்பதை நினைத்துக் கவலைப்பட வேண்டும்? என்ற வினா எழலாம். உண்மையில் 16% பொருளாதார வளர்ச்சியால் சமூகத்திற்கு ஏற்படும் நன்மைகளை விட, மைனஸ் 1.83% வேளாண்துறையின் எதிர்மறை வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம்.
உற்பத்தி, சேவைத்துறைக்கு பாதிப்பில்லை
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித்துறையும், சேவைத்துறையும் தான் 97 %-க்கும் கூடுதலாக பங்களித்துள்ளன. அத்துறைகளை சார்ந்திருக்கும் மக்கள் தொகையின் அளவு 40% மட்டும் தான். அதனால், அத்துறையை சார்ந்திருப்போரின் பொருளாதார நிலை பெருமளவில் மேம்படும்.
வேளாண்துறை மோசமாக அடி வாங்கும்
ஆனால், மிகக்குறைந்த அளவில் பங்களித்துள்ள வேளாண்துறையை சார்ந்திருக்கும் மக்களின் அளவு 60% ஆகும். வேளாண் உற்பத்தி மதிப்பான ரூ.51,862.76 கோடியை தமிழக மக்களில் 60 விழுக்காட்டினரான 4.80 கோடி பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.10,804 ஆக இருக்கும்.
திமுக அரசின் வேதனையான சாதனை
பொருளாதார அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருப்பது தான் திமுக அரசின் வேதனையான சாதனை ஆகும். தமிழ்நாட்டில் வேளாண்துறை வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்து தராதது தான், இந்த அளவு வீழ்ச்சிக்கு காரணம்.
மக்களை ஏமாற்றுவதை மன்னிக்க முடியாது
பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள திமுக அரசு, அதை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முயல்வதை மன்னிக்க முடியாது. மோசடிகளை அரங்கேற்றுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசு, அந்த வழக்கத்தைக் கைவிட்டு, வேளாண்துறை வீழ்ச்சியை ஒப்புக் கொள்ள வேண்டும்; கடந்த கால பாவங்களைப் போக்க பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
===