
கல்லூரிகளில் முதல்வர் இல்லை :
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது ;
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன.
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்து விட்டது.
என்ன செய்கிறது திமுக அரசு? :
கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.
அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்பாமல் அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
பேராசிரியர்கள் பணியிடங்கள் காலி :
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10,500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9,000-க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன.
விளம்பர வெளிச்சத்தில் திமுக அரசு :
இத்தகைய சூழலில் முதல்வர்களும் இல்லை என்றால் அரசு கல்லூரிகளில் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்கும்; கல்வி இருக்காது. விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு இந்த அடிப்படை உண்மை கூட தெரியவில்லை.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் பயனில்லை. 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப் படவில்லை; இரண்டு ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. அப்படியானால் தமிழகத்தில் யாருக்கும் பயனில்லாத இப்படி ஓர் அரசு எதற்காக தொடர வேண்டும் என்ற வினா தான் எழுகிறது.
எனவே, காலியாக உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 9,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
=====