

குறைந்த மனித வேலை நாட்கள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையில் வெளியான போதே இது போதுமானதல்ல என்றும், கடந்த காலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு நடப்பாண்டிலும் வேலை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
திமுக அரசு அலட்சியம்
ஆனால், தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை. அதன் விளைவாகவே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி மனித வேலை நாள்களும் கடந்த திசம்பர் 7ம் தேதியுடன் முடிந்து விட்டன.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி முழுமையாக தீர்ந்து விட்ட நிலையில், இனி யாருக்கும் வேலை வழங்க முடியாது. ஒருவேளை வேலை வழங்கப்பட்டாலும் அதற்கான நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்குமா? என்பது தெரியவில்லை.
சராசரியாக 16 நாட்கள் வேலை
நடப்பாண்டில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு தமிழக அரசு எத்தனை நாள்களுக்கு வேலை வழங்கியிருக்கிறது தெரியுமா? சராசரியாக வெறும் 16 நாள்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பணி செய்வதற்காக மொத்தம் 85.73 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 74.93 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகின்றன.
ஆனால், அவர்களில் வெறும் 52.45 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் நடப்பாண்டில் திமுக அரசு வேலை வழங்கியுள்ளது. மீதமுள்ள 23 லட்சம் குடும்பங்களுக்கு ஒரே ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை.
5,539 குடும்பங்களுக்கு மட்டுமே வேலை
அதுமட்டுமின்றி, 5,539 குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. 2023&24ம் ஆண்டில் 4 லட்சம் குடும்பங்களுக்கும் 100 நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதில் 80ல் ஒரு பங்கினருக்கு மட்டுமே 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஊரக மக்களின் வறுமையை போக்கி, வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் இத்திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தும் லட்சணம் இது தான்.
150 நாட்கள் வேலை - வாக்குறுதி என்னாச்சு?
தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு, சராசரியாக 16 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலை நாள்களை 150 ஆக உயர்த்த வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டப்பூர்வமாக,, அரசியல்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசுக்கு இப்போது தான் கடிதம்
நடப்பு நிதியாண்டின் 9 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், மத்திய அரசு ஒதுக்கிய நிதி முழுமையாக தீர்ந்து விட்ட நிலையில் இப்போது தான் கூடுதல் வேலை நாள்களை ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு திமுக அரசு கடிதம் எழுதியுள்ளது. கூடுதலாக 9 கோடி வேலை நாள்களை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் திமுக அரசு கோரியுள்ளது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது தெரியவில்லை.
150 நாட்கள் வேலை - வாய்ப்பே இல்லை
ஒரு வேளை அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டாலும் கூட அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 நாள்கள் மட்டும் தான் கூடுதலாக கிடைக்கும். இது திமுக அளித்த வாக்குறுதியான 150 நாள்களில் ஐந்தில் ஒரு பங்கு கூட கிடைக்காது. அவ்வளவு ஏன்?... முந்தைய அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில் வழங்கப்பட்ட 50.22 நாள்களில் கிட்டத்தட்ட பாதியாக மட்டும் தான் இருக்கும். இது தானா திமுக அரசின் சாதனை?
மத்திய அரசை வலியுறுத்தவில்லை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது மனிதத் தேவையின் அடிப்படையிலானது ஆகும். கடந்த ஆண்டுகளில் 40 கோடி மனித வேலைநாள்கள் வரை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி மனித வேலைநாள்கள் 4 மாதங்களுக்குக் கூட போதுமானது அல்ல என்பதை திமுக அரசு உணர்ந்து கொண்டு, கூடுதல் வேலைநாள்களை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யாமல், 4 மாதங்களில் வழங்கி முடிக்கப் பட்டிருக்க வேண்டிய சராசரி 16 நாள்கள் வேலையை 9 மாதங்களுக்கு இழுத்து வழங்கியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் துரோகத்தை திமுக செய்து விட்டது. மேலும் தும்பை விட்டு வாலை பிடிப்பதைப் போல இப்போது தான் கூடுதல் வேலை நாள்கள் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது” என்று அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
===================