

வெளிநாட்டு முதலீடுகள்
Annamalai Criticized CM MK Stalin : வெளிநாட்டு தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்திற்கு பெரும் வருவாய் கொண்டு வரப்படுவதாகவும், பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாகவும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதுபற்றி கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இதுவரை வந்துள்ள முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், திமுக அரசு மவுனம் காக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் தமிழக முதல்வர்
இந்தநிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ தமிழக முதல்வர் ஸ்டாலினும், அவரது தொழில்துறை அமைச்சர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பெருமையுடன் அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்கின்றன.
ரூ.1,720 கோடி முதலீடு எங்கே?
தென் கொரிய நிறுவனமான Hwaseung, 20,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு பெரிய அளவிலான தோல் அல்லாத காலணி உற்பத்தி வசதியை நிறுவ தமிழகத்தில் ரூ.1,720 கோடி முதலீட்டை உறுதி செய்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
ஆந்திராவுக்கு நகர்ந்த Hwaseung
ஆனால், 3 மாதங்களுக்குள் Hwaseung நிறுவனம் தனது இந்த முதலீட்டை ஆந்திர பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறி வரும் நேரத்தில், தமிழ்நாடு மெத்தனம் மற்றும் நிர்வாக அக்கறையின்மை காரணமாக தனது தளத்தை இழந்து வருகிறது.
வாய்ப்புகளை இழக்கும் தமிழகம்
வாய்ப்புகளின் வளமான பூமியாக இருந்த தமிழகத்தை திமுக அரசு தவறவிட்ட வாய்ப்புகளின் பூமியாக மாற்றி இருப்பது தான் சாதனையாக எஞ்சி நிற்கிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
====