

திமுக அரசு கொடுத்த வாக்குறுதி
DMK Govt Fails to fulfil Promises Annamalai condemns Teachers Arrest : திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, அதாவது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
அந்த வகையில், எஸ்எஸ்டிஏ எனப்படும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
ஆசிரியர்கள் தர்ணா, கைது
மேலும் பலர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: ’’சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவிக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவதா?
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311-ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.
போராட்டத்தை ஒடுக்குவதில் ஆர்வம்
இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு.
முதல்வருக்கு கூச்சமாக இல்லையா?
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமாக இல்லையா?’’ என்று அந்த பதிவில் அண்ணாமலை வினவியுள்ளார்.
==================