

தமிழக மக்களுக்கு காங்கிரஸ் துரோகம்
Annamalai about Parasakthi Movie : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” 'பராசக்தி' திரைப்படம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். பராசக்தி படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்குச் செய்த துரோகத்தையும், அந்தத் தரப்பு செய்த அடாவடித்தனங்களையும் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
காங்கிரஸ் அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது
தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இழைத்த அநீதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்." என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
காங்கிரசை மக்கள் வீழ்த்துவார்கள்
"ஈழப் படுகொலைக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸைத் துரத்தியடித்தது போல, இனி காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளையும் மக்கள் வீழ்த்துவார்கள். இந்தப் படம் திமுகவிற்கு 'முரசொலி' போல அமைந்து அவர்களை வீழ்த்தும்," என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
தாக்கரே குடும்பத்திற்கு பதிலடி
மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களின் விமர்சனம் மற்றும் மிரட்டல்கள் குறித்துக் கேள்விக்கு பதிலளித்த பேசிய அண்ணாமலை, ""ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? அவர்கள் அங்கிருந்து கொண்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ஒரு சாதாரண விவசாயியின் மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். மேடை போட்டு என்னைத் திட்டும் அளவுக்கு நான் உயர்ந்துவிட்டேனா என்று தெரியவில்லை.
காலை வெட்டினாலும் மும்பை வருவேன்
"மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவேன் என்று எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு நிச்சயம் வருவேன், முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள்.
இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் பயந்திருந்தால் நான் என் கிராமத்திலேயே இருந்திருப்பேன்," என்று அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்தார்.
தாக்கரே மிரட்டலுக்கு பதில்
மும்பையை உலகத்தின் தலைநகரம் என்று சொன்னால், அது மராட்டியர்களால் கட்டப்பட்ட நகரம் இல்லை என்று ஆகிவிடாது.
மும்பை நகரம் மராட்டிய சகோதர சகோதரிகளால் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பேசுபவர்கள் அறிவில்லாதவர்கள்," என்று அண்ணாமலை சாடினார்.
சிபிஐ விசாரணைக்கு விஜய்
விஜய் சிபிஐ விசாரணைக்குச் சென்றிருக்கிறார். ஒருவருக்குச் சம்மன் வழங்கப்படுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. சட்ட விதிகளின்படி அவர் ஆஜராகிறார்.
இது ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால் இதில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை தெரிவித்தார்.
=====