

தமிழ் மொழிக்காக தனியாக செயற்கை நுண்ணறிவு பணிகளை உருவாக்க ‘தமிழ் ஏஐ’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா மற்றும் டெபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளன.
அந்தவகையில், தமிழ் செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழ் மொழி ஏஐ துறையில் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் இந்தத் திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதன்மூலம் இந்தியாவின் பல்வகை சமூகங்களும், மொழிகளும் ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைக்க வாய்ப்பு ஏற்படும்.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
தமிழ் ஏஐ 11 மாதங்களில் செயலியாக வரும். சாட்ஜிபிடி போன்று அனைத்து தகவல்களையும் வழங்கும் முகமையாக செயல்படுத்தப்படும்.
தமிழகம் மின்னணு உற்பத்தியின் மையமாக செயல்படுகிறது. புதிய நிறுவனங்கள் வருவதால், தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழகம் மேலும் முன்னேறும்.
எலக்ட்ரானிக் துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி பலமுறை கூறினார். அது தற்போது நிறைவேறி வருகிறது.
ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் உற்பத்தி மையமாக தமிழகம் திகழ்கிறது. விரைவில் ரயில் வீல் உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகே வரவுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்தார்.