

பிகார் தேர்தல் - நாளை ரிசல்ட்
Bihar Assembly Election 2025 Results Update in Tamil : நாடே எதிர்நோக்கி இருக்கும் பிகார் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்து விட்டது. தேர்தலுக்கு பிந்தை கருத்துக் கணிப்புகள் மீண்டும் என்டிஏ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்து இருக்கன்றன. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவியது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தனித்து களம் கண்டது.
66.91% வாக்குகள் பதிவு
இரு கட்டத் தேர்தலில் 66 புள்ளி 91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
பிகார் அரியணை யாருக்கு?
பிற்பகல் 12 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரிய வரும். மாலைக்குள் முடிவுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு, அரியணை ஏறுவது யார் என கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
122 கிடைத்தால் ஆட்சி!
மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 122 இடங்கள் தேவைப்படும் சூழலில், இந்த மேஜிக் நம்பரை எட்டப் போவது தேசிய ஜனநாயக கூட்டணியா? அல்லது மகாகத்பந்தன் கூட்டணியா என்பது தெரிந்து விடும்.
நிதிஷ்குமார்
20 ஆண்டுகளாக பிகார் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் நிதிஷ்குமார். 2005 முதல் முதல்வராக இருந்து வருகிறார். இந்த முறையும் முதல்வர் நாற்காலியை அவர் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
தேஜஸ்வி யாதவ்
மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருந்து இருக்கிறார். அவரை பொருத்தவரை இது மிக முக்கியமான தேர்தல் ஆகும். இதில் மகாகத்பந்தன் கூட்டணி தோற்றால், முதல்வர் பதவிக்காக அடுத்த 5 ஆண்டுகள் தேஜஸ்வி காத்திருக்க வேண்டி இருக்கும்.
பிரசாந்த் கிஷோர்
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். இவரது கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் இவருக்கு கிடைக்கும். இது தேஜஸ்வி கூட்டணியை பதம் பார்க்கும் எனத் தெரிகிறது. 2030 சட்டமன்ற தேர்தல் பிரசாந்த் கிஷோருக்கு கணிசமாக வாய்ப்பை உருவாக்கி தரலாம்.
=====