
சுப்ரீம் கோர்ட்டும் சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையும் தகுந்த பாடம் கற்பித்தார்கள்
Annamalai Slams DMK on Armstrong Murder Case : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், சுப்ரீம் கோர்ட்டும், சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை ஐகோர்ட்டு அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட, சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.
திமுக அரசு ஏன் பயப்படுகிறது
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது? 3) கரூர் தவெக பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு அதை எவ்வாறு விசாரித்தது என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ வசம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
நீதியும் தர்மமும் திமுக அரசை துரத்துகிறது
மேலும், திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு ஐகோர்ட்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3-வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார், நீதியரசர் ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும். ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.