

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு :
Armstrong Murder Case Transfer To CBI : பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
சிபிஐக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் :
இந்நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.
விசாரணை முறையாக இல்லை என வாதம் :
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆளுங்கட்சியினரின் தலையீடும் இருப்பதால், குற்றப் பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : சிறப்பு எஸ்ஐ படுகொலை வழக்கு : "Encounter"ல் கொலையாளி சுட்டுக்கொலை
கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் :
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐக்கு அறிவுறித்தினார்.
=====