நான் வாங்கிய முதல், ஒரே அசையாச் சொத்து இதுதான் : அண்ணாமலை விளக்கம்

BJP Annamalai Land Purchase in Coimbatore : தான் சொத்து வாங்கியது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
BJP Ex President Annamalai Statement on Land Purchase in Coimbatore for Dairy Farm of PMEGP Scheme in Tamil
BJP Ex President Annamalai Statement on Land Purchase in Coimbatore for Dairy Farm of PMEGP Scheme in Tamil
2 min read

BJP Annamalai Land Purchase in Coimbatore : அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனிற்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பிவருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும், எங்கள் 'We the Leaders' அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே, இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

ஆம். கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை, பவர் ஆஃப் அட்டர்னி மூலம் வாங்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி திருமதி அகிலா அவர்களுக்கு, எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது.

இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் 40,59,220 ரூபாய் செலுத்தியுள்ளோம்.

மேலும், நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை(Annamalai Dairy Farm) அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன், அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக, இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான்.

நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து, உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள நமது இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

தமிழகத்தில், பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து, கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது, எனது குடும்பத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஆர்வக்கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களைக் கடவுள் காப்பாற்றட்டும்.

மேலும் படிக்க : திமுகவின் ’சமூக அநீதி கொள்கை' : அண்ணாமலை கடும் விமர்சனம்

இத்தனை ஆண்டுகளாக, எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என் மரியாதை கலந்த நன்றிகள். குறை சொல்வதற்காகவே, வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை(Annamalai Tweet) தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in