

ரவுடி வெட்டிக் கொலை
Nainar Nagendran Condemns DMK on Chennai Rowdy Murder in Hospital : சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக் கொண்டிருந்த ரவுடி ஒருவர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை இந்தப் படுகொலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
இந்தச் சம்பவம் பற்றி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் உள்ள சட்டம் ஒழுங்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
சீரழியும் அரசு மருத்துவமனைகள்
ஏற்கனவே, எலிகள், நாய்களை உலவ விட்டு, பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களின் கூடாரமாக மாற்றி அரசு மருத்துவமனைகளைச் சீரழித்தது போதாதென்று, தற்போது ரவுடிகளுக்கு இடையிலான சண்டைக்களமாக மாற்றி, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு.
அரசு நிறுவனங்களில் பாதுகாப்பு குளறுபடி
இது ஒருபுறமிருக்க பள்ளியில் கொலை, நீதிமன்ற வாயிலில் கொலை, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என அரசு நிறுவனங்கள் அத்தனையிலும் தனது துருப்பிடித்த இரும்புக் கரத்தினால் மக்கள் பாதுகாப்பை சிதைத்துள்ளது திமுக அரசு.
தேர்தல் காலத்தில் முற்றுப்புள்ளி
காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறுவது போல அறிவாலயம் அரசால் உருவான கொலையுதிர் காலத்திற்குத் தேர்தல் காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பர் தமிழக மக்கள்”. இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
==================