

கே.என். நேரு ஊழல்
Nainar Nagendran Criticized KN Nehru ED Case : குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். குறிப்பாக, குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம், அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் என அவரின் குற்றங்களை அமலாக்கத்துறை 3 முறை சுட்டிக்காட்டி அவரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதற்கு சற்றும் சளைக்காமல், திமுக அரசும் , காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களை, சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, இவரின் வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் அவரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதற்கு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து ஏதும் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார். இதற்கு என்டிஏ கூட்டணி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை, தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
அதன்படி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ”குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரைவில் வழக்கு பதிந்து, உண்மை வெளிக்கொணரப்படும் என்னும் நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
மொத்தத்தில், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷனில் கொளுக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடிந்து விழும் நாளுக்கான கவுண்ட்டவுன் இன்றோடு தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், கூடிய விரைவில், திமுக உடன்பிறப்புகளின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டு, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் என்று அவர் விமர்சித்துள்ளார்.