
செய்தியாளர்கள் சந்திப்பு
Nainar Nagendran on Karur Stampede Death : சென்னை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் ஒவ்வொரு கட்சி தலைவர் வாரியாக பேசும் போது, கரூர் சம்பவத்தில் என்னென்ன நடந்தது என்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது ஒருதலை பட்சமாக, அவர்கள் பக்கம் எந்த குறையும் இல்லை என்று கூறினார்.
உண்மையை திரித்து பேசுவதா?
ஆனால் நடந்தது என்ன என்பதை பலமுறை நாங்கள் ஊடகங்களில் சொல்லியிருந்தாலும் கூட, இன்று சட்டசபையிலும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாங்கள் கூறினோம் என்று தெரிவித்துள்ளார்.
செருப்பு வீசப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சை ஆரம்பிக்கும் போது பத்து ரூபாய் பாட்டில் கமிஷன் என்று சொல்லும்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது. செருப்பு வீசப்பட்டது மட்டுமல்ல, உடனடியாக ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், கரண்ட் ஆப் செய்து லத்தி சார்ஜ் நடந்து இருக்கிறது.
ரவுண்டானா பகுதியில் அனுமதி மறுப்பு
ஆனால் இங்கு பேசும்போது அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார்கள். 5 டிஎஸ்பி, 500 போலீசார் இருந்ததாக சொன்னார். அங்கு போலீசார் யாருமில்லை. டிஎஸ்பியும் யாரும் இல்லை. இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.
எதிர்க்கட்சிகள் குரல் நசுக்கப்படுகிறது
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கிற மாதிரி, முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி போலீசார் செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் என்ன கூட்டம் நடத்தினாலும் நாங்கள் கேட்கிற இடத்திற்கு அனுமதி தருவதில்லை. நீதிமன்றம் சென்று தான் நாங்கள் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது.
மேலும் படிக்க : Karur : அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது? எடப்பாடி பழனிசாமி
குறுகலான இடத்தில் பிரசாரம்
அதுமட்டுமல்ல, கரூரில் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் நடத்த தவெகவினர் அனுமதி கேட்டிருந்தனர். அந்த இடத்தில் அனுமதி கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் குறுகலான இடத்தில் அனுமதி கொடுத்து, 41 பேர் சாவிற்கு தமிழக அரசு காரணமாக இருந்தது வருத்தத்திற்கும், வேதனைக் குரியதாகவும் இருக்கிறது” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.