

நயினார் நாகேந்திரன் ஆதரவு
Nainar Nagendran Slams DMK : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து,தமிழக மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக திமுகவின் அவலங்கள் மற்றும் ஆட்சி குறித்த விமர்சித்து வருகிறார். இந்த வரிசையைில், கரூர் சம்பவம் மற்றும் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை கூறினார்.
நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியீடு
இதைத்தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் இந்துவிரோத திமுக
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது எனத் திமுக அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய நீதிமன்ற அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும் திருந்தாமல், திரும்பத் திரும்ப ஹிந்து விரோத விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு தனது அராஜகக் கொட்டத்தாலேயே கோட்டையிலிருந்து துரத்தியடிக்கப்படும்.
பாவலா செய்கிறது திமுக அரசு
மேலும், அராஜக திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும். தீபத்தூணில் தீபமேற்றலாம் எனத் தீர்ப்பளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குட்டு வைத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் வீணாகக் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கி இருக்கிறது திமுக அரசு என்று பதிவிட்டுள்ள அவர், தீபமேற்றும் தமிழர் பண்பாட்டை முடக்க கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் திமுக அரசு, இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தால் குட்டுப்பட்டால் திருந்தும்? எப்போது தான் தனது இந்து மத வெறுப்பைக் கைவிடும்? திரும்பத் திரும்ப விழுந்தும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக பாவலா செய்கிறது திமுக அரசு என்று கூறியுள்ளார்.
சம்மட்டி அடி வாங்கினால் தான் திமுக அரசு அடங்கும்போல
தனது பிரிவினைவாதப் போக்கிற்கு நீதிமன்றத்தில் சவுக்கடி வாங்கியது போதாதென்று, வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களிடம் சம்மட்டி அடி வாங்கினால் தான் திமுக அரசு அடங்கும் போல! எல்லாம் இன்னும் 70 நாட்கள் தான். எத்தனை மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்து திமுக அரசு கதறட்டும். தமிழர் பண்பாட்டு விரோத திமுக அரசை வீழ்த்தி தீபத்தூணில் தீபமேற்றுவது 100% உறுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.