
அதிமுகவில் ஓபிஎஸ் பயணம் :
O Panneerselvam Team Quits NDA Alliance : அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவுக்கு சட்ட ரீதியாக பிரச்சினை வந்த போதெல்லாம் முதல்வர் பதவியை ஏற்று பின்னர் அவரிடம் ஒப்படைத்தவர். ஜெயலலிதா மறைந்த போதும் முதல்வர் பதவி இவரை தேடி வந்தது. முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸ், சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் பதவியை துறந்தார். பின்னர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்ம யுத்தம் நடத்திய அவர், முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடியை கடுமையாக எதிர்த்தார்.
எடப்பாடியுடன் கைகோர்த்த ஓபிஎஸ் :
அவருக்கான செல்வாக்கு குறைய தொடங்கியதால், பாஜகவின் முயற்சியால், தர்ம யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, எடப்பாடியுடன் கைகோர்த்தார். துணை முதல்வரான அவர், சட்டசபை தேர்தல் வரை எடப்பாடியுடன் பயணித்தார். 2024 தேர்தலில் அதிமுக தொல்வியடைய எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து தூக்கியெறியப்பட்டார் ஓபிஎஸ்.
தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி :
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது, ஓபிஎஸ் தரப்பு படுதோல்வியை சந்தித்தது. மீண்டும் அதிமுகவில் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி செக் வைத்தார். பாஜக மூலம் ஓபிஎஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.
பாஜக புறக்கணிப்பால் அதிருப்தி :
அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்தார். இதனால், விரக்தியின் எல்லைக்குச் சென்ற ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் படிக்க : மதுரையில் மாநில மாநாடு : தனி வழியில் பயணிக்கும் ஓபிஎஸ்
தொண்டர்கள் மீட்பு குழு ஆலோசனை :
சென்னையில் இன்று நடைபெற்ற தொண்டர்கள் மீட்பு குழு ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி விவாதிக்கப்பட்டது. 2026 சட்டசபை தேர்தல், வருங்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
மூன்று முக்கிய முடிவுகள் - பண்ருட்டியார் :
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் எதிர்காலம் குறித்தும், மக்களின் பிரச்னைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் :
ஆனால், இன்று முதல் அந்தக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டது. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் அதன் தலைவர் ஓபிஎஸ் விரைவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எந்தக் கட்சியினருடன் தற்போதைய சூழலுக்கு கூட்டணி கிடையாது. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்.
விலகல் காரணம் - நாடே அறியும் :
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் நாடறிந்தது தான். எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2026 தேர்தலும் வரும். அதில், சரியான கூட்டணி, மக்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் கூட்டணி எதிர்காலத்தில் அமையும்” இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
முதல்வருடன் சந்திப்பு - ஓபிஎஸ் பதில் :
முதல்வர் ஸ்டாலினை இன்று காலை சந்தித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “நான் சென்னையில் இருந்தால் தியோசோஃபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கு. அங்கு இன்று முதல்வரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றேன்.” என்றார்.
====