சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: கோட்டைவிட்ட அதிகாரிகள்

Pallikaranai Marshland Issue : பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில், ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்காமல் இருந்துது தெரிய வந்திருக்கிறது.
build an apartment complex in Pallikaranai, It has revealed officials did not verify the documents
build an apartment complex in Pallikaranai, It has revealed officials did not verify the documents
2 min read

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

Pallikaranai Marshland Issue : சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காப்புக்காடாக உள்ளது. வெள்ள காலத்தில் சென்னையை காக்கும் முக்கிய பகுதியாக இது திகழ்ந்து வருகிறது. மேலும், ஆயிரக் கணக்கான பறவைகள் வலசை வந்து போகும் இடமாக, பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில், கட்டுமான திட்டங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டபோது, அதற்கான வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், சதுப்பு நிலத்தில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்குள் கட்டுமான பணிகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராம்சார் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

இந்நிலையில், ராம்சார் தல வரைபடத்தில் வரும் குறிப்பிட்ட, 5 சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலத்தில், அடுக்குமாடி கட்ட சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுக்குமாடி திட்ட பணிகளுக்கு தடை விதித்துள்ளது.

சிக்கும் வனத்துறை, நீர்வளத்துறை

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வனத்துறை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சி.எம்.டி.ஏ., நீர்வளத்துறை ஆகியவை உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு நீர்வளத்துறை அளித்த தடையின்மை சான்றிதழில், ” தனியார் நிறுவனம் அடுக்குமாடி திட்டத்துக்காக தேர்வு செய்துள்ள நிலத்தில், 2015, 2023 ஆண்டுகளில் பெய்த மழையின்போது, 6 அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது ஆய்வில் தெரியவந்தது. ஒட்டியம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இங்கு வந்து சேருகிறது.

வருவாய்த்துறை ஆவணம்

எனவே, தரைமட்டத்தை மேடவாக்கம் - சோழில்கநல்லுார் சாலையின் தரைமட்டத்தில் இருந்து, 4 மீட்டர் அதாவது, 24 அடி உயரத்துக்கு நிலத்தை உயர்த்த வேண்டும். குறிப்பாக, இந்த நிலம், தரிசு என வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்நிலம் நீர் நிலையை ஆக்கிரமிக்கவில்லை என்பதற்கான வருவாய் துறையின் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி, கட்டுமான நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.

சதுப்பு நிலத்தில் சர்வே எண்

இது தொடர்பான விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது, இந்த நிலத்தை ஒட்டிய, 534 என்ற சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதி சதுப்பு நிலம் என்று உள்ளது. நீர்வளத்துறையின் பொறியாளர்கள் கள ஆய்வுக்கு சென்றபோதும், பக்கத்து சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் சதுப்பு நிலம் என்பது உறுதியானது.

கோட்டை விட்ட அரசு அதிகாரிகள்

534 என்ற சர்வே எண்ணுக்கு உரிய பழைய 'அ' பதிவேடு ஆவணத்தை கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்யவே இல்லை. இது தொடர்பான ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது சி.எம்.டி.ஏ., வருவாய் துறை அதிகாரிகளின் பொறுப்பு. விண்ணப்பதாரரின் எல்லையை ஒட்டிய நிலம் சதுப்பு நிலமா என்பதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உறுதி செய்து இருக்க வேண்டும்.

அனுமதி வழங்கியது எப்படி?

கூடுதல் விபரங்கள், ஆவணங்களை சரி பார்க்காமல், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்(CMDA Officials) எந்த அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கினார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அனுமதி அளிப்பதில் அதிகாரிகளின் பங்கு

இதுபற்றி நகரமைப்பு வல்லுநர்கள் கூறுகையில், 2014ல் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி கமிட்டி பரிந்துரை அடிப்படையில், கட்டுமான திட்டங்களை அனுமதி அளிப்பதில் அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் இடையிலான தொடர்பை கண்காணிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கு

இதன்படி, அதிகாரிகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்காததே, ராம்சார் நிலத்தில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பிரச்சினைகள் ஏற்பட காரணம். என்று அவர் கூறினர்.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in