

தவெக தலைவர் விஜய்
Jana Nayagan Movie Censor Certificate Issue in Tamil : தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இந்தநிலையில், அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்று கூறப்படுவதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
தணிக்கை சான்றிதழ் - நீதிமன்றத்தில் வழக்கு
இந்தநிலையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தணிக்கை குழுவை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்ததால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.
இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், வெள்ளியன்று காலை தீர்ப்பளிப்பதாக கூறினார். எனவே, ஜனநாயகன் வெளியீட்டு தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்தது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.
விஜய்க்கு ஆதரவாக எழுந்த குரல்கள்
நடிகர் விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் கொடுக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டது.
தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு
இந்தநிலையில், ஜனநாயகன் படம் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆஷா, படத்திற்கு உடனடியாக U\A தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஜனநாயகன் படத்தை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மறு ஆய்வுக்கு அனுப்பும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தணிக்கை வாரியம் மேல்முறையீடு
இதனிடையே, தனி நீதிபதியின் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்ய தலைமை நீதிபதி முன்பாக முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்யுங்கள், பிற்பகலில் விசாரிக்கிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு காரணமாக ஜனநாயகன் படத்திற்கான சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது.
=============