

காங்கிரஸ் - தவெக
Jana Nayagan Movie Censor Certificate Issue in Tamil : காங்கிரசை பொருத்தவரை கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் இல்லை. தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்று காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக தெரியும். திமுக கூட்டணியில் தொடர்ந்தால், வெற்றி வேண்டுமானால் கிடைக்கலாம், கட்சி தேய்வை தடுக்க முடியாது.
கூடுதல் தொகுதி, துணை முதல்வர் பதவி
அதேசமயம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்தால், கூடுதல் இடங்களில் போட்டியிட முடியும்,. ஒருவேளை விஜய் முதல்வரானால், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, கேரளா, புதுச்சேரியில் விஜயின் செல்வாக்கு காங்கிரசை ஆட்சி பீடத்தில் அமர்த்த உதவியாக இருக்கும்.
சென்சார் போர்டு கையில் ‘ஜனநாயகன்’
இந்தநிலையில், விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை வாரியம் மூலம் பிரச்சினை வந்திருக்கிறது. திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் களம் இறங்கியிருப்பது, தவெக மற்றும் காங்கிரஸ் இடையே இணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.
மத்திய அரசை சாடும் மாணிக்கம் தாகூர்
விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய அரசு தற்போது சென்சார் போர்டை ஒரு ஒடுக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வரிசையில் தற்போது சென்சார் போர்டும் சினிமா துறையைக் கட்டுப்படுத்தும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்து சுதந்திரம் சிதைக்கப்படுகிறது
மேலும், அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தைத் திட்டமிட்டே மத்திய அரசு சிதைப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சித்தாந்தங்களைப் பரப்பும் படங்களுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, மாற்றுச் சிந்தனை கொண்ட கலைப் படைப்புகளை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு இது அழகல்ல
கலையை அதிகாரத்தின் முன் மண்டியிட வைப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும், திரைப்படங்களுக்கு அரசியல் ரீதியான அனுமதியை விட அரசியல் சாசனப் பாதுகாப்பே அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
விஜய்க்காக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
விஜய் அரசியல் வருகைக்கு பிறகு இதுவரை காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததே கிடையாது. ஜனநாயகன விவகாரத்தில் கிடைத்துள்ள இந்த வெளிப்படையான ஆதரவு, வரும் காலங்களில் தவெக - காங்கிரஸ் இடையே ஒரு பலமான கூட்டணி அமைவதற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு ஜோதிமணி ஆதரவு
ஜனநாயகன் சர்ச்சையை மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்து இருப்பது தெரிகிறது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தராமல் இருப்பது, தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதி மணி அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இதேபோன்று, ராகுல் காந்திக்கு நெருக்கமான, அகில இந்திய காங்கிரஸ் டேட்டா பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் உள்ளிட்டோரும் விஜய் ஆதரவாக, மத்திய அரசை சாடி தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி இருக்கிறார்கள்.