

27 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரிகள்
Poondi, Puzhal, Chembarambakkam Lake Water Level : இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால், சென்னைக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்து இருக்கிறது. இதன் காரணமாக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது.
பூண்டி, புழல் ஏரிகள்
3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியும், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியும் முழுமையாக நிரம்பின. ஏரிகளின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி
இந்நிலையில், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, முழுமையாக நிரம்பியது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவு
1998ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 சென்னை குடிநீர் ஏரிகளும் நிரம்பியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு தட்டுப்பாடு வராது
இதன் காரணமாக சென்னைக்கு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
=====