சென்னை–அரக்கோணம் இடையே நாளை முதல் ஏசி மின்சார ரயில் சேவை! கட்டணம் நேரம் வசதிகள் என்ன?

சென்னை–அரக்கோணம் இடையே நாளை முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், ரயில் இயக்க நேரம், நிறுத்தங்கள், குறித்துப் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...
Chennai–Arakkonam AC EMU Train Service to Begin Tomorrow: Timings and Fare Details
Chennai–Arakkonam AC EMU Train Service to Begin Tomorrow: Timings and Fare DetailsGoogle
2 min read

சென்னை To அரக்கோணம் இடையே நாளை முதல் ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் நாளை (அக்டோபர் 23) முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த ரயில், சென்னை சென்ட்ரல், ஆவடி, அரக்கோணம் இடையிலான பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும்.

இந்தச் சேவை டிசம்பர் 24 வரை சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது.

எந்தெந்த வழித்தடங்களில் ஏசி ரயில் இயக்கப்படும்?

சென்னை சென்ட்ரல் – ஆவடி, சென்னை சென்ட்ரல் அரக்கோணம், ஆவடி – அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் மூன்று ஜோடி ஏசி மின்சார ரயில் சேவைகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படும். வார இறுதி நாட்களில் சேவை இருக்காது.

ரயில் நேரங்கள் என்ன?

காலை 6.30 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும் மெதுவான ஏசி ரயில், காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தைச் சென்றடையும்.

திரும்பும் விரைவு ரயில் காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை அடையும்.

மாலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் விரைவு ஏசி ரயில், இரவு 7.55 மணிக்கு அரக்கோணத்தைச் சென்றடையும்.

இந்த விரைவு ரயில்கள் குறிப்பிட்ட சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

ஏசி ரயிலில் என்னென்ன வசதிகள் உள்ளன?

12 பெட்டிகளைக் கொண்ட இந்த ஏசி மின்சார ரயிலில் தானியங்கி கதவுகள், CCTV கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் தகவல் பலகைகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் அவசரகாலப் பயணிகள் தொடர்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் மற்றும் அதிர்வுகளைக் குறைக்கும் வசதிகளும் பயணத்தை வசதியாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

கட்டண விவரம் புறநகர் ஏசி மின்சார ரயில் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.35ல் இருந்து அதிகபட்சமாக ரூ.130 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 10 கி.மீ. வரை ரூ.35ஆகவும், 11 முதல் 15 கி.மீ. வரை ரூ.40 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரை ரூ.60 ஆகவும், 26 முதல் 35 கி.மீ. வரை ரூ.85 ஆகவும், 36 முதல் 45 வரை ரூ.90 ஆகவும், 46 முதல் 50 கி.மீ. வரை ரூ.95 ஆகவும், 51 முதல் 55கி.மீ. வரை ரூ.100, 56 முதல் 60கி.மீ வரை ரூ.105, 61 முதல் 65கி.மீ. வரை ரூ.115, 66 முதல் 70கி.மீ வரை ரூ.130 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவடி பயணிகளுக்கு நிறுத்தம் இருக்குமா?

இந்தச் சேவையில் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையிலான விரைவு ரயில் ஆவடி நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆவடி வழியாகப் பயணம் செய்யும் சில பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஆவடி – அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடி இடையே தனித்தனி சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏற்கெனவே சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அரக்கோணம் வழித்தடத்திலும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது.

சோதனைக்காலத்தில் பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in