அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி? பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!

அரசுப் பள்ளிகளில் சத்துணவு மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.
Chicken biryani once a week in government schools? School Education Minister Rajmohan shares the information!
Chicken biryani once a week in government schools? School Education Minister Rajmohan shares the information!google,ai
1 min read

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருநாள் 'சிக்கன் பிரியாணி' வழங்குவது குறித்து முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

சத்துணவில் சிக்கன் பிரியாணி திட்டப் பரிந்துரை

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வாரம் ஒருநாள் 'சிக்கன் பிரியாணி' வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரை செய்துள்ளேன். இது பல துறைகள் சார்ந்த விவகாரம் என்பதால், முதல்வர் இதுகுறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார் என்றார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து விளக்கம்

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகப் பாடப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்பது தவறான தகவல்.

எங்களது நிலைப்பாடு எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளிப்பதே ஆகும். த.வெ.க-வின் அனைத்து நிகழ்வுகளும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் தொடங்கும்.

கடந்த காலங்களில் கூட

கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் மாளிகை நிகழ்வில் பங்கேற்றபோதும் கூட இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர் தனியான சில நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும்

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும் நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அரசியல் பகைமை காரணமாக அவை நிறுத்தப்படாது.

உதாரணமாக, 'அம்மா உணவகத்தின்' தரம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த நல்ல திட்டங்களை வழங்குவதில்தான் நாங்கள் போட்டி போடுவோம் என்றார்.

இ.வி.எம் மற்றும் தேர்தல் தோல்வி விமர்சனம்

கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் தோல்விக்கான காரணங்களை எதிர்த்தரப்பினர் வெளியில் தேடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் என்றும், இ.வி.எம் இயந்திரக் கோளாறு என்றும் சாக்குப்போக்கு சொல்வதை விடுத்து, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். சட்டரீதியாக எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.

தனியார் பள்ளி கட்டணக் கட்டுப்பாடு

தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயர்த்தாமல் குறைக்காவிட்டால், தற்போது நடைமுறையிலுள்ள கட்டண நிர்ணயக் குழு மறுசீரமைக்கப்படும்.

அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிப்பதை உறுதிசெய்ய மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in