
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் :
CM MK Stalin Foreign Visit Germany : வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரதமர், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்போது மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.
முதல்வர் ஸ்டாலின் - 6 முறை வெளிநாடு பயணம் :
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொள்ளும் 6வது வெளிநாட்டு சுற்றுப் பயணம் இது. அப்படி என்றால், ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
வெளிநாட்டு முதலீடுகள் - வெள்ளை அறிக்கை :
ஜெர்மனியில் முதலீடுகள் ஈர்ப்பு என்ன என்பதை பார்க்கும் முன்பு, இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது?” “வெள்ளை அறிக்கை எங்கே? தொழிற்சாலைகள் எங்கே? வேலைகள் எங்கே?” என்ற அடுக்கடுக்கான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.
உலகப் பயணம் அவசியமா? :
“ஒரு முதலமைச்சர் கடந்த கால பயணங்களின் முடிவுகள், அதனால் தமிழகம் பெற்ற பயன்களை என்பதை வெளிப்படுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டுமா?” என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டு பணிகளுக்காக சென்று வந்து இருக்கிறார். ஒவ்வொரு முறையும், தமிழக அரசு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கோரியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இதை விளக்கும் விரிவான வெள்ளை அறிக்கை ஒருமுறை கூட வெளியிடப்படவில்லை.
விவரங்களை வெளியிட தயக்கம் ஏன்? :
எந்தத் திட்டங்கள் நிறைவேறி இருக்கின்றன. எத்தனை ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பது போன்ற எந்த விவரமும் இதுவரை ஆதாரங்களுடன் வெளியிடப்படவில்லை.
முதல்வர் ஸ்டாலினை போல் இல்லாமல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வெளிநாடு செல்லாமலேயே இதுவரை 12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டாவோஸ் பயணத்தின் போது ₹15 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை கொண்டு வந்தார்.
மக்கள் எழுப்பும் கேள்விகள் :
ஆனால், ஆண்டுதோறும், ஸ்டாலின் 10 நாள்கள் பயணங்களை மேற்கொள்கிறார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, அவை காகிதத்தில் மட்டுமே உள்ளன.
முதலீடுகளை ஈர்க்க உங்களுக்கு உண்மையிலேயே ஒரு உலகச் சுற்றுப்பயணம் தேவையா?”
ஜெர்மனியில் இப்போது மேற்கொண்டுள்ள பயணத்தில், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலை நிகழ்ச்சிகளும் அடங்கும். இவை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. அப்படி என்றால், மீதமுள்ள 7 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்கிறார்,. யாரை சந்திக்கிறார், போன்ற கேள்விகளுக்கு எந்த விவரக் குறிப்பும் இல்லை.
உதாரணமாக ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் சென்னை அருகே ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், அதற்கான விரிவாக்க பணிகளுக்கு ஜெர்மனி பயணத்தின் போது ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது :
ஒரு முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்பது கோடிக்கணக்கான மக்கள் செலுத்தும் வரி பணம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அதற்காக விரிவான திட்டம் மிகவும் அவசியம். அது என்ன என்பதை அறியும் உரிமையும் மக்களுக்கு இருக்கிறது.
சமூக பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை :
வெளிநாட்டு பயணத்தில் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், சாதி அடிப்படையிலான அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட வெங்கைவயலுக்கு இன்றுவரை செல்லவில்லை. 25 காவல் மரணங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகத்திலும் வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றின் மூலம் நிர்வாகம் சீர்குலைகிறது. ஆனால் வெளிநாடுகளில் புகைப்படம் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பீகார் கூட செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் வெங்கைவயல், கள்ளக்குறிச்சி அல்லது சிவகங்கை பற்றி அக்கறையே இல்லை.
மக்கள் முன்வைக்கும் கேள்விகள் :
இதுவரை யாரும் கேட்காத கேள்விகள் சிலவற்றை மக்கள் முன்வைக்கிறார்கள். உ,ரிய பதில் கிடைக்குமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
1. கடந்த கால புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு பட்டியல் மற்றும் அவற்றின் நிலை என்ன?
2. ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை?
3. எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையில் திட்டங்களாக செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன?
4. ஜெர்மனி பயணத்திற்கான தினசரி திட்டத்தை வெளியிடுவதில் தயக்கம் என்ன?
5. வரி செலுத்துவோருக்கு என்ன பதில்?
6. தொழில்துறை துறையிடமிருந்து ஏன் பொறுப்புடன் கூடிய பதில் இல்லை?
7. இது உண்மையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக? அல்லது அரசியல் விளம்பரத்திற்காகவா?
மேலும் படிக்க : 10 லட்சம் கோடி முதலீடு ‘பச்சை பொய்’ : அன்புமணி ஆவேசம்
வாக்களித்து திமுகவை ஆட்சியில் அமரவைத்து, ஸ்டாலினை முதல்வராக்கிய தமிழக மக்களின் கேள்விகளே இவை. திட்டமிடல், தெளிவான பதில் இல்லாமல், உலக சுற்றுப் பயணம் மேற்கொள்வதால், தமிழகத்திற்கு என்ன பயன்? போன்ற வினாகளுக்கு சரியான பதில் கிடைக்கும் வரை முதல்வரின் பயணங்கள் அனைத்தும் மர்ம பயணங்களாக நின்று போகும்.
==============