”பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்” : விவசாயிகள் பக்கம் நிற்பதாக முதல்வர் விஜய் உறுதி : பரிசீலனையில் மாற்று இடங்கள்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டசபையில், முதல்வர் விஜய் அறிவித்து இருக்கிறார்.
Chief Minister Vijay announced  that the Parandur airport project will be dropped
Chief Minister Vijay announced that the Parandur airport project will be droppedAI generated
2 min read

சௌகார் ஜானகிக்கு இரங்கல்

தமிழக சட்டசபை இன்றுகாலை கூடியதும், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

110 விதியின் கீழ் அறிக்கை

இதைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் பேசுகையில், “ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிலும் அடங்கியுள்ளது.

சென்னைக்கு புதிய விமான நிலையம்

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும்.

பந்தூரில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள்..

ஆனால், முந்தைய அரசு விவசாயிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20.01.2025 அன்று இப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்:

மக்களோடு நான் நிற்கிறேன்

சென்னை, பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.

விவசாயிகளை கைவிட மாட்டேன்

நீண்ட நாட்களுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலங்களைப் பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.

விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறேன்.

தொழில் வளர்ச்சியை எதிர்க்கவில்லை

தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு.

பரந்தூரில் விமான நிலையம் அமையாது

ஆனால், பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது. இத்திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தேன்.

மாற்று இடம் தேவை

மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

தமிழக அரசு பரிசீலிக்கும்

துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிய இடத்தில் விமான நிலையம்

அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.

சென்னை விமான நிலையம் விரிவாக்கம்

இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய டெர்மினல் 5 என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற பின், ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும்.

ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகள்

மேலும், புதிய டெர்மினல் 5 பயணிகள் முனையம் செயலாக்கத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இவ்விமானம் நிலையம் இருக்கும்.

இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பூர்த்தி செய்யப்படும்.” என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

===============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in