

ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு
மருத்துவம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மருத்துவக் காப்பீட்டில் யாரெல்லாம் பயன்பெறலாம்?
குடும்பத் தலைவர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத் தலைவரின் பெற்றோர்.
நிபந்தனை
குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அனைத்தும் ரேஷன் கார்டில் (மின்னணு குடும்ப அட்டை) கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள்
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) பெறப்பட்ட சான்றிதழ்.
அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்றுகள்.
குடும்ப அட்டை.
காப்பீட்டு அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை
அருகிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருக்கும் மருத்துவக் காப்பீட்டு மையத்தை அணுக வேண்டும்.
வருமான சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பயோமெட்ரிக் பதிவுகள் முடிக்கப்பட்ட பின் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
சிகிச்சை மையங்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்
அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலை அறிய https://www.cmchistn.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
சட்டபேரவையில் வெளியான பிற முக்கிய அறிவிப்புகள்
வடசென்னைக்கு புதிய மருத்துவமனை
பெரம்பூரில் ரூ. 300 கோடி மதிப்பில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை
சென்னை ஸ்டான்லி, நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் இக்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கூடுதலாக வழங்கப்படும்.
=====