
CM MK Stalin Health Condition Update : லேசான தலைச்சுற்றல் காரணமாக திங்கள் (ஜூலை 21) அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்(Apollo Hospital) அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்த அவர் மீண்டும் கிரீம்ஸ் சாலை மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.
இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே தான் அரசுப் பணிகளைத் தொடர்வதாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின்(Ungaludan Stalin) முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அப்போலோ மருத்துவமனையில்(Apollo Hospital Chennai) அனுமதிக்கப்பட்டு அங்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி : மருத்துவ பரிசோதனைகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். நேற்றைய தேதி வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை முதல்வர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், அவர் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.