50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி : 14.23 லட்சம் விவசாயிகளுக்கு பயன் : முதல்வர் அறிவிப்பு : விவசாய சங்கங்கள் அதிருப்தி

கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
CM Vijay announced  crop loans  up to Rs. 50,000 taken by marginal farmers from cooperative banks will be waived
CM Vijay announced crop loans up to Rs. 50,000 taken by marginal farmers from cooperative banks will be waivedgoogle
1 min read

தவெக தேர்தல் வாக்குறுதி

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

வேளாண்துறை ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 2025-ம் ஆண்டு மே 1 முதல் 2026 பிப்.28தேதிவரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உத்தர விட்டார்.

பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் உத்தரவு

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ”அரசு கடன் தள்ளுபடி திட்டங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2025 நவ.28-ம் தேதி வெளியிட்ட மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தின் இன்றைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, இக்கட்டான இந்த சூழலிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதி வரை பெற்றபயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

குறு விவசாயிகளுக்கு முழுத் தள்ளுபடி

ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 100 சதவீதமும், ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறுவிவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

14.23 லட்சம் விவசாயிகள் பயன்

எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் அதிருப்தி

தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. சிறு, குறு விவசாயிகள் இரண்டரை ஏக்கர் கடன் பெற்றிருந்தாலே ரூ.91,250 வருகிறது.

இதை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் மட்டுமே தான் விவசாயிகளுக்கு ஓரளவு கடனில் இருந்து மீள முடியும். எனவே, முதல்வர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in