பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம்: அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

சென்னையின் பட்டினப்பாக்கத்தில் 15 மாடிகளுடன் புதிய தலைமைச் செயலகம் அமைவது உறுதியாகியுள்ளது.
  New Secretariat Pattinapakkam
New Secretariat Pattinapakkamsource:thamizhalai,ai generated
1 min read

புதிய தலைமைச் செயலக அறிவிப்பு

சென்னையில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தின் இடநெருக்கடி மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுமார் ரூ.1,200 கோடி செலவில் தமிழ்நாடு அரசுக்கு புதிய சட்டமன்ற வளாகம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அண்மையில் அறிவித்திருந்தார்.

பட்டினப்பாக்கம் இடம் தேர்வு

புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்காக கிண்டி, நந்தம்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் ஆகிய மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதில் நகரின் மையப்பகுதியில் அமைந்து அரசு அலுவலகங்களை எளிதில் அணுகும் வசதி கொண்டதால், பட்டினப்பாக்கத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

நில மதிப்பும் ஆரம்பகட்ட அனுமதியும்

சாந்தோம் பிரதான சாலையை ஒட்டியுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தின் ஒரு சதுர அடி மதிப்பு ரூ. 22,000 ஆகும். அதன்படி நிலத்தின் உத்தேச மதிப்பு ரூ. 2,047 கோடியாகும்.

இதற்கான கட்டுமானச் செலவு ரூ. 1,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 3,247 கோடியை எட்டுகிறது.

மயிலாப்பூர் எல்லைக்குட்பட்ட இந்த நிலத்தைப் பயன்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை ஆரம்பகட்ட அனுமதிகளை வழங்கியுள்ளன.

15 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம்

இத்திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் பிரதான கட்டிடமானது 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முன்னதாக இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்து, பின்னர் இடிக்கப்பட்ட 1,380 அரசு மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளின் நிலங்கள் தற்போது இதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இனி புதிய தலைமைச் செயலகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த மூன்று தனிக்குழுக்கள் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in