

CM Vijay Launches Eri Portal for Water Bodies Restoration NOC
‘ஏரி’ இணையதளம் அறிமுகம்
தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் (NGOs) மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையவழியில் தடையின்மை சான்றிதழ்களைப் (NOC) பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தை https://eri.tn.gov.in தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் இன்று (10.11.2026) தொடங்கி வைத்தார்.
சிஎஸ்ஆர் (CSR) நிதி பயன்பாடும் இணையதள நோக்கம்
பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியுதவியுடன் நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், பல்வேறு அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைய முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் இந்த எளிய இணையவழி சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தின் முக்கிய அம்சங்கள்
5 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறிய மேம்பாட்டுப் பணிகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
நேரடி விண்ணப்ப முறைக்கு மாற்றாக, வெளிப்படையான முறையில் தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், விண்ணப்பப் பரிசீலனை, ஒப்புதல் கண்காணிப்பு மற்றும் துறைகளுடனான ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னார்வ அமைப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கள்
நிகழ்வின் போது சிறுதுளி (Siruthuli), இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (EFI), எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை (Exnora), மெகா அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை (Dhan Foundation) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் தடையின்மை சான்றிதழ்களை வழங்கினார்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ், வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
=============