

தமிழக வெற்றிக் கழகம்
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் முதல் ஆளாக ஆதரவுக்கரம் நீட்டியது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
அதைத்தொடர்ந்து, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் கட்சிகளும் தவெகவிற்கு ஆதரவு தர முதல்வரானார் விஜய். தவெக ஆட்சி அமைந்து, தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி அரசு பொறுப்பேற்றது.
தோழமை கட்சிகள் கூட்டம்
அதன்பிறகு, மதிமுகவும் கூட்டணியில் இணைந்து இருக்கிறது. இந்தநிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் பங்கேற்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், பிரவீன் காந்தி...
ஜோதிமணி, ராபர்ட் ப்ரூஸ், துரை வைகோ, நவாஸ் கனி, அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், வன்னியரசு, ஷாஜகான், ஐயுஎம்எல் பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், விசிக துணை பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இடதுசாரிகள் பங்கேற்கவில்லை
இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. ஆனால், தவெக அரசுக்கு அளிக்கும் ஆதரவு தொடரும் என்றும், திமுக கூறுவது போல ஆட்சி கவிழாது எனவும், 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டணி அமைக்க தலைவர்கள் வலியுறுத்தல்
தவெக ஆதரவு கட்சிகளை ஒரு முறையான கூட்டணியாக உருவாக்க வேண்டும். இந்த கூட்டணிக்கு ஒரு பெயரைச் சூட்டி, அதற்கென ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தி பேசினர்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி இணைந்து செயல்பட்டு வெற்றியை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
முதல்வர் விஜய் ஆலோசனை
தொடர்ந்து முதல்வர் விஜய், கூட்டணிக்காக தான் வைத்திருக்கும் பெயர் குறித்து தலைவர்களிடம் ஆலோசித்தார். மேலும், தவெக தலைமையிலான அரசு மதச்சார்பின்மை கொள்கையில் என்றும் உறுதியாக இருக்கும் என்றார்.
ஊழலற்ற ஆட்சி உறுதி
லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என விஜய் உறுதி அளித்தார்.
திமுகவின் சதியை முறியடிப்போம்
தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக சதி செய்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த சதியை அனைவரும் சேர்ந்து முறியடிப்போம்.
திமுகவின் சதியை தடுக்க வேண்டும் என்றால், கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். திமுகவை பலவீனப்படுத்தவும் வேண்டும்.
இடைத்தேர்தல் 100% வெற்றி அவசியம்
விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதில் 100 சதவீதம் வெற்றி என்பது அவசியமான ஒன்று. அப்போது தான், எதையும் சாதிக்கலாம்.
ஆட்சி நீடிக்கும்
ஆட்சி கவிழும் என்று சிலர் பேசுகின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். தொடர்ந்து தமிழகத்திலு தவெக ஆட்சி என்பது இருக்கும்.
வேறு கட்சிகள் கூட்டணிக்கு வரும்
இதற்கு கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அப்போது தான், நாம் தொடர் வெற்றிகளை குவிக்க முடியும். மேலும் சில கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வர இருக்கின்றன” இவ்வாறு தோழமை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விஜய் பேசினார்.
================