

Annan Seer Scheme Tamil Nadu 8 Gram Gold Coin Silk Saree
அண்ணன் சீர் திட்டம் அறிவிப்பு
தமிழக முதல்வர் விஜய் அறிவித்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
யாரெல்லாம் பயன்பெறலாம்? (தகுதிகள்)
திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் இதுவரை பயன்பெறாதவராக இருக்க வேண்டும்.
எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?
திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு சலுகை
05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு, வரும் 15.01.2027 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாட்டில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களுக்கான செயல்முறை மற்றும் முக்கிய விதிகள்
விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகியவற்றின் தகுதி சரிபார்க்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் (Unique ID) வழங்கப்படும்
விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
திருமணப் பதிவு கட்டாயம்
திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.
மேல்முறையீடு வாய்ப்பு
தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
===============