

தமிழக வேற்றிக் கழக அரசு
TN Cabinet Minister தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதிமுக சார்பில் 25 பேர் ஆதரவு தந்தனர்.
தமிழக அமைச்சரவை
கடந்த 10ம் தேதி முதல்வர் விஜய் மற்றும் 9 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
அமைச்சரவையில் யாருக்கு இடம்?
காங்கிரஸ் அமைச்சரவை இடம் பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், அதிமுகவும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. எனவே, தான் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநருடன் முதல்வரின் தனிச்செயலாளர் சந்திப்பு
கேரள பயணத்தை முடித்து கொண்டு, பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அவரை, முதலமைச்சர் விஜயின் தனிச்செயலாளர் செந்தில்குமார் மக்கள் மாளிகையில் சந்தித்துள்ளார்.
ஆளுநரிடம் ஆவணங்கள் அளிப்பு?
அப்போது, ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்குவதோடு, அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆவணங்களையும் அரசு தரப்பில் சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
இதன் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 18ம் தேதி கேரளாவில் புதிய அரசு பதவியேற்க இருப்பதால் ஆளுநர் அர்லேகர் செல்ல வேண்டி இருக்கும். எனவே, அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.
தேங்கிக் கிடக்கும் கோப்புகள்
அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்காததால், கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை
அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் தான் எடுக்கப்படும். அமைச்சர்கள் முழு அளவில் இன்னும் நியமி்க்கப்பட வில்லை, துறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் அந்தக் கூட்டமும் நடைபெறவில்லை.
அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில், முதலமைச்சர் உட்பட 34 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். ஏற்கனவே, முதல்வர் உட்பட 10 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் 24 இடங்கள் காலியாக உள்ளன.
அமைச்சரவையில் எந்தக் கட்சிகள்?
அதில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை அமைச்சரவைக்குள் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
அதிமுகவிற்கு எப்போது வாய்ப்பு?
அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுகவை பொருத்தவரை, உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்ததுதான், வேலுமணி தரப்பின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
=====================================