கோவை பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு : ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் - முதல்வர் விஜய்!

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்; முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Coimbatore Periyar Arivagam Book Procurement Scam Investigation
Coimbatore Periyar Arivagam Book Procurement Scam Investigationsource:google
3 min read

Coimbatore Periyar Arivagam Book Procurement Scam Investigation

பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதல் ஊழல்

கோவையில் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் விஜய்யால் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய தலைமுறை சிந்தை இணையதளத்தில், எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையின் மூலம் வெளியான விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பெரியார் அறிவுலகப் பார்வையிட்ட பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை ஒன்று மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த கட்டுரையில் யாருமே அறியாத 'அகல் விளக்கு' என்ற பதிப்பகத்தின் பெயரில் அச்சிடப்பட்ட 1,800 புத்தகங்கள் வாங்கியிருப்பதாகக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாலடியார் புத்தக விலை முறைகேடு

பிற பதிப்பகங்கள் ரூ.350-க்கு விற்பனை செய்யும் நாலடியார் நூலை, சூர்யா பாலு என்ற பெயரில் எழுதப்பட்ட 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்னும் முந்நூறு பக்க நூலாக ரூ.1,445 கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.

தரம் குறைந்த புத்தகங்கள் மற்றும் போலி கீழடி விவரங்கள்

கூகுளில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை வைத்து கீழடி பற்றிய போலி புத்தகங்களும், பாரதியாரின் கதைகள் என்ற பெயரில் பத்தாம் வகுப்பு மாணவர் கூட நன்றாக எழுதக்கூடிய வகையிலான தரமற்ற நூல்களும் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவு

இதனைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன் இதுகுறித்து பேசினார்.

அப்போது அவர், "கோவையில் பெரியார் அறிவுலகம் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். அதை படிக்கும்போதும் ஒரு பக்கம் வேதனையாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

நானும் ஒரு வாசகர் தான். அந்த பெரியார் அறிவுலகத்தில் இருக்கும் புத்தகத்தின் பெயர்கள் எல்லாம் என் வாழ்நாளிலேயே கேள்விப்பட்டதில்லை. அதில் ஒரு பதிப்பகத்தில் 1,500 நூல்கள் வாங்கியுள்ளனர். அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதமே புத்தகங்களை வாங்கியுள்ளனர்.

இது திமுக ஆட்சியில் நடந்திருக்கும் மெகா ஊழலின் எடுத்துக்காட்டு. பெரியார் பெயரிலேயே ஊழல் செய்தது வெட்கமாக இல்லையா? அதில் யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளர் பெயரில் கீழடி குறித்து புத்தகம். அதில், கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட புத்தகம் என்று கூகுளில் இருந்து படங்களை எடுத்துள்ளனர். அப்படியொரு சிலையே கீழடியில் இல்லை.

பாரதியாரின் கதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். நல்லவேளை அந்த கதையெல்லாம் படிக்காமல் பாரதியார் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்கூட நன்றாக எழுதுவார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடங்கப்படுகிறது. யாரெல்லாம் சம்பந்தப்பட்ட இருக்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் கடும் கண்டனம்

மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்;

தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிந்த வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெருமாள் முருகன்

அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குச் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம்.

எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான தற்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாக உள்ளது.

தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.

இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?

திமுக வரலாறு தெரிந்தவர்களுக்கு புதிதல்ல...

தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால் தான் நம் மனம் பதைபதைக்கிறது.

மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.

பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாக தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி" என்று தனது கண்டனத்தை முதல்வர் விஜய் பதிவு செய்துள்ளார்.

==============