

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
வெளியில் இருந்து கம்யூ. ஆதரவு
காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், கொள்கை அடிப்படையில் அமைச்சரவையிலோ அல்லது கூட்டணிகளிலோஇடதுசாரிகள் இணையாமல், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்து வந்தனர். கூட்டணிக்கு அழைத்தும் செல்லவில்லை.
7 தொகுதிகள் காலி
முதல்வர் விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தது, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்தது என தமிழக சட்டப்பேரவையில் 7 தொகுதிகள் காலியாகின.
அக். 6ல் இடைத்தேர்தல்
இதில் 5 தொகுதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 9ம் தேதி முடிவு வெளியாக இருக்கிறது.
இடைதேர்தலில் பிரதான கட்சிகள்
ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
மார்க்சிஸ்ட்கள் ஆலோசனை
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் மாநில நிர்வாகக் குழு கூட்டம், சென்னை தி.நகரிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநிலக் குழு கூட்டம், திருச்சியிலும் நடைபெற்றன.
இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி
கூட்டத்தின் முடிவில் எந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்காமல், இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.
எனவே, எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தேர்தலை இடதுசாரிகள் தனித்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
தவெக அரசுக்கு ஆதரவு தொடரும்
தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும். வேட்பாளர்கள் சென்னையில் நாளை அறிமுகப்படுத்தப்படுவர். அதேநேரம் அரசுக்கான எங்களது வெளி ஆதரவு தொடரும்.
இன்றைய சூழலில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஒரு இடம் இருக்கிறது என்று திடமாக நம்புகிறோம். அவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.” என்றார்.
ஆரோக்கியமற்ற அரசியல்
தனித்து போட்டி குறித்து பெ.சண்முகம் தெரிவிக்கையில், “வெற்றிபெற்ற 20 நாட்களிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகி ஆளுங்கட்சியில் இணைந்தது ஆரோக்கியமற்ற அரசியலுக்கு வழிவகுக்கும் செயலாகும்.
தவெக ஆட்சியமைத்து 120 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வுகள், பட்ஜெட்டில் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது உள்ளிட்ட பல்வேறு அரசு நடவடிக்கைகளில் நாங்கள் மாறுபட்டிருக்கிறோம்.
அதுகுறித்து வலியுறுத்தியும் பலவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எந்த அணியிலும் இல்லை
அதேபோல் திமுக, அதிமுக என எந்த அணிகளிலும் நாங்கள் இல்லை. ஆகவே, இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகளின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானித்து இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுவதால, 5 முனைப் போட்டி என களம் கடுமையாகி இருக்கிறது.
====================