

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை
“திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு ஜனநாயக சக்தியாகத்தான் பார்க்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் இருக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திமுக சொல்கிறது.
திமுக கூட்டணியில் இ.கம்யூ. இல்லை
விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அங்கு இல்லை. இந்தச் சூழலில், ஒரு தேர்தல் அணிச் சேர்க்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சூழல் இப்போது இல்லை. எனவே, இதைக் கருத்தில் கொண்டுதான் இத்தகைய முடிவை நாங்கள் எடுக்கிறோம்.
ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவு
எப்போதும் ஜனநாயக சக்திகளை நாங்கள் கடந்து செல்ல மாட்டோம். அங்கே பகை முரண்களுக்கு எந்த இடமும் இல்லை; இதை நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.
பாஜகவோடு அரசியல் பகை
அரசியல் பகை முரண் கொண்ட ஒரே இயக்கம் பாஜக மட்டும்தான். சூழல் கனிந்து வரும்போது, உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் நேரத்தில், அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் கூடிப் பேசி அணிச் சேர்க்கைகள் குறித்து சிந்திப்போம்; கட்சி அதற்கான முடிவை எடுக்கும்.
இன்றைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற இயலாது. தமிழகத்தில் எந்தவொரு இயக்கமும் திமுகவையோ, அதிமுகவையோ எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அவற்றை இன்றைக்கும் நாங்கள் ஒரு ஜனநாயக சக்தியாகத்தான் மதிப்பீடு செய்கிறோம்.
தவெக ஜனநாயக சக்தி தான்
அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய ஜனநாயக சக்தியாகப் பிறப்பெடுத்திருக்கிறது. அதற்கு ஆதரவளிக்க வேண்டியது எங்களது அரசியல் கடமை; அந்த வகையில் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.
மக்களுக்காக எப்போதும் ஒலிக்கும்
சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இடம்பெறாவிட்டாலும் எங்கள் குரல் தெருக்களில் ஒலிக்கும். தெருக்களையே நாடாளுமன்றமாக கூட்டும் கொள்கையும், கோட்பாடும், அமைப்பும் எங்களிடம் உள்ளது.
உழைக்கும் மக்கள் உள்ளவரை, கருத்தைக் கருத்தால் சந்திக்கும் மக்கள் இருக்கும் வரை, நல்ல அறிஞர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை, தமிழ் கூறும் நல்லுலகில் கம்யூனிஸ்ட் பேரியக்கங்களை யாராலும் அழித்துவிட முடியாது” இவ்வாறு மு. வீரபாண்டியன் பேட்டியளித்தார்.
=================