

Complaint Filed Against Vijay with the Election Commission! Condemnation for Involving Children in Political Campaigning! Full Details!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பிரச்சாரத்தில் குழந்தைகளைத் தவறான முறையில் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரபரப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
புகாரின் பின்னணி என்ன?
சமீபத்திய சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் விஜய், "2026 தேர்தலில் எனக்கு வாக்களிக்கும்படி உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை வலியுறுத்துங்கள்.
அடம்பிடித்து சதிப்பதைப்போல
உங்களுக்குப் பிடித்த ஒரு பொருள் வேண்டும் என்றால் எப்படி அடம் பிடித்துச் சாதிப்பீர்களோ, அதேபோல் விஜய்க்கு வாக்களிக்க உங்கள் பெற்றோரிடம் அடம் பிடிக்க வேண்டும்" என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.
'எமோஷனல் பிளாக்மெயில்'
விஜய்யின் இந்தப் பேச்சு 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்யும் வகையில் இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்
இது தொடர்பாகத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நடத்தை விதிமீறல்
2023-ஆம் ஆண்டே அரசியல் பிரச்சாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் தெளிவான விதிகளை வகுத்துள்ளது. விஜய் அந்த விதிகளை வெளிப்படையாக மீறியுள்ளார்.
குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்பு
விஜய்யின் பேச்சால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள், வீடுகளில் "சாப்பிட மாட்டேன்" என்று அடம் பிடிப்பதும், பெற்றோருடன் சண்டையிடுவதும் அவர்களின் மன நலத்தைப் பாதிக்கும் செயலாக உள்ளது.
விஜய் மன்னிப்பு கோர வேண்டும்
இந்தச் செயலுக்காக விஜய் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், குழந்தைகளை வைத்து 'ரீல்ஸ்' மற்றும் 'ஷார்ட்ஸ்' மூலம் எமோஷனல் பிரச்சாரம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கண்டனக் கடிதம்
தேர்தல் ஆணையம் மட்டுமன்றி, தவெக தலைவர் விஜய்க்கும் நேரடியாகக் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்
அதில், குழந்தைகளை அரசியலுக்குள் இழுப்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும், உடனடியாக இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
=====