

தோழர் நல்லகண்ணு
Communist Party Nallakannu History in Tamil ; 101 வயது எப்போதும் எளிமை, எளிமை இதுதான் தோழர் நல்லகண்ணு. 80 ஆண்டுகால அரசியல் பயணம் அவரின் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. கடைசிவரை வீடு கிடையாது, கார் கிடையாது, மாதம் 2,000 ரூபாயில் மிகவும் யதார்த்தமான வாழ்க்கை என நாடே போற்றும் தலைவராக நிறைவாக வாழ்ந்து விடை பெற்று இருக்கிறார் நல்லகண்ணு.
இளைய தலைமுறைக்கு அரசியல் இலக்கணம்
எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புக்கு அரசியல்வாதிகளில் ரோல் மாடல் யார் என்றால், அனைவரும் நல்லகண்ணுவை தான் கை காட்டுவார்கள்.
இளைய தலைமுறைக்கு அரசியல் என்றால் என்ன? அதில் எப்படி நேர்மையை கடைபிடிப்பது, மக்களுக்காக எப்படி பாடுபடுவது என்று பாடம் எடுக்க விரும்பினால், நல்லகண்ணு வாழ்க்கையை படிக்க சொன்னால் போதும்.
சைவம் to அசைவம் - பின்னணி
தந்தை வழியில், சைவ உணவுகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த நல்லகண்ணு, 1948-49 களில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடத் தொடங்கினார்.
அசைவம் அப்படித் தான் அவர் வாழ்வில் நுழைந்தது. பொதுமக்கள் சாப்பிடும் உணவே கமியூனிஸ்டுகளின் உணவு என அடிக்கடி சொல்வார் நல்லகண்ணு.
மீசையை துறந்த வரலாறு
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற நல்லகண்ணுவை 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம், அரவணைத்துக் கொண்டது. முதலில் கையில் எடுத்தது விவசாயிகள் போராட்டம். 1949ல் அவரை கைது செய்த காவல்துறை, மீசையை சிகரெட்டால் பொசுக்கியும், முடியை பிய்த்தும் சித்ரவதைகளே நல்லகண்ணு மீசைய துறக்க காரணம்.
ஆயுள் தண்டனை
நல்லகண்ணு உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 1951 முதல் 1956 வரை சிறைவாசம் அனுபவித்தார். அப்போது தான் அவருக்கு வாசிப்பு பழக்கம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் புத்தகங்களை அதிகம் வாசிக்கும் தலைவர்களில் ஒருவராக நல்லகண்ணு திகழ்ந்தார். மனைவியாக அமைந்த ரஞ்சிதமும், அவரின் கொள்கைக்கு ஏற்ப வாழ்ந்து, 2016ல் காலமானார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தோழர்
ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நாங்குநேரி கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து செல்லுதல், வீடுகளுக்கு நிலை வைத்துக் கொள்ளும் உரிமை, செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடப்பது என நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு மிக நீளமானது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் நல்லகண்ணு
சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர். குற்றாலம் அருவிக்கு அருகே ரேஸ் கோர்ஸ் அமைக்கும் முயற்சி நடந்ததை, தாமரை இதழில், கட்டுரை எழுதியே தடுத்தவர் நல்லகண்ணு.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க, அவரே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றார். பாரதி மீது பற்று கொண்டிருந்த நல்லகண்ணு, முதல் மகளுக்கு காசி பாரதி என்றும், பேத்திக்கு பாரதி கண்ணம்மா என்றும் பெயர் சூட்டி இருந்தார்.
இசை ரசிகர் நல்லகண்ணு
நல்லகண்ணு நல்ல இசை ரசிகர். நாதஸ்வர இசை அவருக்கு மிகவும் பிடிக்கும். நலம்தானா பாடல் தான் அவரது செல்போனில் வெகு நாட்கள் ரிங் டோனாக இருந்து வந்தது. பணத்தை எப்போதுமே துச்சமாக தான் பார்ப்பார் நல்லகண்ணு.
பணத்தை துச்சமாக மதித்தவர்
அவருடைய 80வது பிறந்தநாளுக்கு பரிசாக 1 கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதை வாங்கி கட்சிக்கே திருப்பி கொடுத்து விட்டார் நல்லகண்ணு.
அதேபோல் தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து 1 லட்சம் ரூபாயும் வழங்கியது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயிகளுக்கும் கொடுத்து விட்டார்.
தேர்தலில் தோற்றாலும், மக்கள் மனதில் இடம்பிடித்தவர்
மொத்தம் 3 தேர்தல்களில் போட்டியிட்டு மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார் நல்லகண்ணு. 1967 மற்றும் 1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கோவையிலும் போட்டியிட்டார்.
நூற்றாண்டு வாழ்க்கை - வரலாறான நல்லகண்ணு
எளிமை, நேர்மை, அயராத அர்ப்பணிப்புடன் கூடிய தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்க்கை, இளம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். வயது மூப்பின் காரணமாக நல்லகண்ணு விடைபெற்றாலும், அவரின் அரசியல் வரலாறு காலம் கடந்து என்றும் நிலைத்து நிற்கும்
அரசியலில் ஓர் அதிசயம்
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர். இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதே இல்லை தில்லை என 100 சதவீதம் உறுதியாக சொல்லலாம்.
==============