

தொங்கு சட்டசபை
தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க 118 என்ற மேஜிக் நம்பர் தேவைப்படும் நிலையில், முதன்முறையாக யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
ஆதரவு கோரும் தவெக
திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. எனவே, எஞ்சிய 10 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக கோரியுள்ளது.
முதல் தேர்தலில் அமோக வெற்றி
2024ம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
தவெக 34.92 சதவீத வாக்குகள்
தவெக 34.92% வாக்குகள் பெற்றுள்ளன. பெரும்பான்மையை தவறவிட்டபோதும் பிற கட்சிகள் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க விஜய் முடிவு செய்துள்ளார். அப்படி ஒரு ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் முதல்முறையாக மலரும் கூட்டணி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும்.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
திமுக கூட்டணியில் இடம்பெற்று 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5ஐ கைப்பற்றி இருக்கிறது. தவெகவின் அழைப்பு பரிசீலித்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்தது.
நிபந்தனையுடன் ஆதரவு
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. வகுப்புவாத சக்திகளின் ஆதரவை பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு தரப்படுகிறது.
கூட்டணி தொடரும்
மக்களவை, உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆதரவு அளிப்பதாக அறிவித்த பிறகு, காங்கிரஸ் நிர்வாகிகள், பனையூர் சென்ற விஜயை நேரில் சந்தித்தனர். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் விஜய்.
வரவேற்பு, ஆதரவு கடிதம்
அவர்களும் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். தவெகவை ஆதரிப்பதற்கான கடிதத்தையும் அவர்கள் வழங்கினர்.
தவெக பலம் 113
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதையடுத்து தவெக பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. த.வெ.க அமைச்சரவையில் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் சீட் ஒதுக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
6 பேரின் ஆதரவு தேவை
இன்னும் 6 பேரின் ஆதரவு தவெகவிற்கு தேவை. இது தொடர்பாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள், விசிகவின் ஆதரவையும் கோரியுள்ளார்.
===================