

தமிழக தேர்தல் களம்
TVK Congress Alliance : 2004ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதும், அவருக்கு கூடும் கூட்டங்கள் கூட்டணி கணக்குகளை மாற்ற வாய்ப்பாக அமைந்துள்ளன.
ஆட்சியில் பங்கு - காங்கிரஸ் வாதம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தமிழக காங்கிரஸ் செயல்பாடு சரியாக இல்லை என்று, அக்கட்சியின் எம்பிக்களே வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். கூட்டணியில் அதிக இடங்கள் தேவை என்ற கோஷமும் வலுத்து வருகிறது. சுமார் 60 ஆண்டுகளாக தமிழக ஆட்சிக் கட்டிலில் இல்லாத காங்கிரஸ், அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன் வைக்கிறது.
தவெகவுடன் காங்கிரஸ் பேச்சு
இதை திமுக தலைமை ரசிக்கவில்லை என்பதோடு, சென்ற முறை கொடுத்த தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு தர தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் திருப்பம்
தொலைபேசியில் நடைபெறும் இந்த உரையாடல்கள், தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்று காங்கிரஸ் டெல்லி தலைவர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.
விஜய் வாக்கு வங்கி - காங்கிரஸ் யோசனை
திமுக கடுமையாக விமர்சிக்க விமர்சிக்க விஜய்க்கான வாக்கு வங்கி உயர்ந்து கொண்டே வருகிறது. இது தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தலிலும் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்பது தவெகவை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் வாதமாக இருக்கிறது.
திமுகவை எதிர்க்கும் காங். தொண்டர்கள்
காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களும் திமுக கூட்டணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள் கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொண்டு, மற்ற இடங்களில் திமுகவுக்காக உழைப்பதால், கட்சி வளராது என்பது அவர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களும், தொடர் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி தொய்வடைந்து வருவதையும்,
தவெக கூட்டணி - காங். தொண்டர்கள் விருப்பம்
திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், தவெகவுடன் கைகோர்க்காவிட்டால் தாங்கள் பணியாற்ற விருப்பமில்லை எனப் பல அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. தொண்டர்களின் இந்த அழுத்தம் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக கூட்டணி - காங்கிரஸ் - 30
அரசியல் பார்வையாளர்களும், தவெகவுடன் கூட்டணி அமைப்பதால், தென் மாநிலங்களில் காங்கிரசுக்கு கிடைக்கும் நன்மை பற்றி பட்டியலிட்டு கூறி வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 30 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தவெக கூட்டணி - காங்கிரஸ் - 70
ஆனால், தவெக கூட்டணிக்கு சென்றால் 70 இடங்கள் வரை காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் களம் காண்பது தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கிடைப்பது, காங்கிரசை மேலும் வலிமையாக்கும். துணை முதல்வர் பதவி வரை தர விஜய் தரப்பு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. விஜயுடனான ஒரு கூட்டணி தமிழ்நாட்டைத் தாண்டி கேரளா அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேரளாவில் காங்கிரசுக்கு லாபம்
கேரளாவில் பாஜக தனது கால்தடத்தை பலப்படுத்தி வரும் நிலையில், அங்குள்ள காங்கிரஸ் தலைமை, தனது பாரம்பரிய ஆதரவு அடித்தளத்தை பாதுகாக்க ஆர்வம் காட்டுகிறது. விஜயின் செல்வாக்கு, கேரளாவில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த முறை அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தவெக ஒரு நல்வாய்ப்பு என்று கருதப்படுகிறது.
புதுச்சேரியிலும் காங்கிரசுக்கு லாபம்
புதுச்சேரியில் காங்கிரஸ் - தவெக இடையிலான ஒருமித்த கருத்து, கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளை நிச்சயம் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணி - ஆதரிக்கும் காங். தலைவர்கள்
அதேசமயம் இதற்கு எதிர்ப்பு இல்லாமலும் போகவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக காங்கிரஸ் கே. செல்வப்பெருந்தகை, ப. சிதம்பரம் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திமுகவுடனான கூட்டணியை தொடர்வதையே ஆதரிக்கிறார்கள். சில தொகுதிகளில் ஆவது வெற்றி நிச்சயம் என்று இவர்கள் மல்லுக்கட்டுகின்றனர்.
வெறும் வெற்றி எதற்கு? - அதிகாரம் அவசியம்
சில தொகுதிகளில் வெற்றி, ஆட்சியில் பங்கு இல்லாமை, காங்கிரசை எப்படி வளர்க்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு திமுகவுக்கு ஜால்ரா தட்டுவதை விட வேறு வேலையே இருக்காது என்று அங்கலாய்க்கின்றனர் தவெக சாய்சாக கூறும் தலைவர்கள்.
தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி
கூட்டணிகள் நிரந்தரமானவை அல்ல. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் திமுகவிலிருந்து பிரிந்தாலும், அரசியல் சூழ்நிலைகள் தேவைப்பட்டால், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது என்று தலைவர்கள் நம்புகின்றனர்.
ராகுலின் கையில் முடிவு!
தற்போதைய சூழலில் யாருடன் கூட்டணி என்ற இறுதி முடிவு காங்கிரஸ் மேலிடத்திடமே உள்ளது. தொண்டர்களின் மனநிலை, வெறும் தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களில் நீண்டகால அரசியல் கணக்கீடுகள், அதனால் காங்கிரசுக்கு கிடைக்க போகும் லாபம் ஆகியவற்றை எடைபோட்டு வரும் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
======================