

திமுக vs அதிமுக
Congress MP Manickam Tagore on DMK : தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், வெற்றி வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுக, நலத்திட்டங்களை அறிவித்து, மக்களை கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக, கூட்டணிக்குள் பல்வேறு கட்சிகளை கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. விஜய் வருகை தமிழக அரசியலில் புதிய கூட்டணிகளை அமைக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி இருக்கிறது. இதுவரை திமுக மற்றும் அதிமுகவை மட்டுமே நம்பியிருந்த மற்ற கட்சிகளுக்கு, தவெகவின் வருகை புதிய வழியை காட்டி இருக்கிறது என்றே கூறலாம்.
திராவிட கட்சிகளுக்கு தவெக சவால்
தவெகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்று நிபந்தனையை மட்டுமே தவெக வைத்துள்ளது.
கூட்டணிக்கு அழைக்கும் தவெக
இங்கும், அங்கும் போய்ப் பார்த்துவிட்ட கட்சிகள் தவெகவில் கடைசி நேரத்தில் கூட ஐக்கியமாகலாம் என்ற கணிப்புகள் கூறுகின்றன. இது தேர்தல் முடிவுகளை புரட்டி போடலாம். இதுவரை சிறுபான்மை வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அள்ளி வந்த திமுக, இந்தமுறை விஜயால் சிக்கலை எதிர்கொள்ள இருக்கிறது.
திமுக கூட்டணியில் சலசலப்பு
திமுக கூட்டணியில் சலசலப்பு நிகழ்கிறது. சில கட்சிகள் தவெகவுக்கு செல்லும், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பயணிக்க விரும்புகிறது என்ற தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னைக்கு வரும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள், திமுகவுடன் மட்டுமே கூட்டணி என்று கூறினாலும், தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்வதாக, எம்பி ஜோதிமணி புயலை கிளப்பினார்.
கூட்டணிையும் அரசியல் உண்மையும்
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு(Loyola IPDS Survey 2026 in Tamil Nadu) காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
கூட்டணி இன்றி வெற்றி கிடைக்காது
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, விசிக தலைவர் திருமாவளவன் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று பதிவிட்ட ட்வீட் ஒன்று மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. அதைவைத்து அரசியல் பகடைக் காய்கள் உருட்டப்பட்டதால், திருமாவளவனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை வந்தது.
திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர்
இந்நிலையில், இப்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து அத்தகைய குரல் ஒன்று எழுந்துள்ளது, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
============